பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா முதல் அலையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவையான உணவுப்பொருட்கள் வழங்குதல், நிதி உதவிகளை நேரடியாக வழங்குதல், சிறுவணிகர்கள் முதல் பெருவணிகர்கள் வரையும், சிறு-குறு தொழில் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை கடன் உதவிகளை வழங்குதல், தொழிலாளர்களுக்கு சலுகைகள் என ரூ.20,96,000 கோடி ரூபாய்-க்கு தற்சார்பு இந்தியா திட்டத்தை அறிவித்து, அதை வெற்றிகரமாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
வங்கிகளுக்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் தேவையான நிதிகளை வழங்கி அவர்களுக்கு கூடுதலாக அவசர கால கடன் வழங்கும் வாய்ப்பை மத்திய நிதியமைச்சர் உருவாக்கிக் கொடுத்தார். அனைத்து தொழில்களும் இதன் மூலம் பயன்பெற்றன. அதேபோன்று, இப்போது இரண்டாவது அலையிலும், மேலும் ரூ.6,10,000 கோடி தொகையை பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். ஏற்கனவே தொடரப்பட்டு வரும் அவசர கால கடன் உதவி திட்டத்திற்கு மேலும் ரூ.1,50,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடியும், அதில் சுகாதார துறைக்கு மட்டும் ரூ.50,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பின்தங்கிய பகுதிகளில் பொது சுகாதார வசதிகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகள் உள்பட, ஆக்சிஜன் ஆலைகள் தயாரிப்பு நிறுவனங்களை தொடங்குவதற்கு 100 சதவீத மத்திய அரசின் உத்தரவாதத்துடன் தலா ஒரு ஆலைக்கு ரூ.2 கோடி வரை கடன் உதவி வழங்கப்பட இருக்கிறது.
பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு ரூ.23,220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், குழந்தைகள் மற்றும் குழந்தை மருத்துவத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தில், ஊழியர்களின் பங்குத்தொகையையும், சிறிய நிறுவனங்களுக்கு நிறுவனங்களின் பங்குத்தொகையையும், மத்திய அரசே செலுத்துகிறது. இதன் மூலம், 11 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் வகையிலும், புதிய வேலைவாய்ப்புகளை லட்சக்கணக்கில் உருவாக்கும் வகையிலும் புதிய பொருளாதார உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் நேரடியாக கலப்பு உரங்களை வாங்குவதற்கு கூடுதலாக ரூ.14,775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த உர மானியம் ரூ.42,275 கோடியாக உயர்கிறது. நவம்பர் வரை 80 கோடி மக்களுக்குக்கான உணவுத்திட்டத்தில், இலவச உணவு தானியம் கூடுதலாக வழங்குவதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி இருந்தது. அதற்கு, இப்போதைய அறிவிப்பில் ரூ.93,869 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான உணவு, சிறுதொழில் வளர்ச்சி, தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் உதவி, விவசாயிகளுக்கு உர மானிய உதவி, சுகாதாரம், பொது சுகாதார திட்டங்களுக்கு உதவி, வேலைவாய்ப்புகள், தொழிலாளர்கள் நலன் என, அனைத்து தரப்பு மக்களுக்கும், பல்வேறு துறைகளுக்கும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடைய புதிய தொகுப்பின் ஊக்க உதவி திட்ட அறிவிப்பு மிகவும் பயன் அளிக்கத்தக்கது.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 5 லட்சம் பேருக்கு விசா கட்டணம் தள்ளுபடி, சுற்றுலா ஏஜெண்டுகளுக்கு ரூ.10 லட்சமும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சமும் கடன் வழங்கப்படும். இதன் மூலம், சுற்றுலாத்துறையில் எழுச்சி ஏற்பட இருக்கிறது. கிராமப்புற டிஜிட்டல் வசதிக்கு ரூ.19,041 கோடி, விவசாயிகளுக்கு கடன் வட்டி மேலும் 2% குறைப்பு என, பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தொழில் அமைப்புகளின், ஏற்றுமதியாளர் அமைப்புகளின் தலைவர்கள், மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகளை வரவேற்றுள்ளனர். கொரோனா காலத்தில் இப்புதிய அறிவிப்புகள் எங்களுக்கு ஊக்கமளித்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சிறப்பான அறிவிப்புகளை கூட புரிந்துகொள்ள முடியாத காங்கிரஸ் கட்சியினர், மக்கள் நலன் கருதி, தேசத்தின் நலன் கருதி வெளியிடப்படும் மத்திய அரசின் அறிவிப்புக்கு மக்களிடம் ஏற்படும் வரவேற்பினை பொறுத்துக்கொள்ள முடியாமல் குறை கூறுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. மத்திய நிதி அமைச்சருக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று அறிக்கையில் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.