கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தில், அமலா சிறுவர், சிறுமிகள் காப்பகம் மற்றும் தனியார் பள்ளி நடத்தி வருபவர் ஜேசுதாஸ் ராஜா (65).இங்கு சிறுவர், சிறுமியர் இல்லம் மற்றும் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இங்கு ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி இந்த பள்ளியில் தங்கி படித்து வந்த 3 மாணவிகள் திடீரென மாயமாகினர்.
இதுகுறித்து, பள்ளி தாளாளர் ஜேசுதாஸ்ராஜா(வயது 65) ஆலடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகளை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளி தாளாளர் ஜேசுதாஸ்ராஜா, மாணவிகள் 3 பேருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததும், அதனால் தான் அவர்கள் மாயமானதும் தெரியவந்தது.
இதையடுத்து மாணவிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜேசுதாஸ்ராஜாவை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அவரிடம் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேசுதாஸ்ராஜாவை கைது செய்தனர். மேலும் பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த 40 சிறுமிகளை போலீசார் மீட்டு கடலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து வீராரெட்டிக்குப்பத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சீல் வைக்க நடவடிக்கை நடந்து வருவதாக போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் தமிழக அரசு வழங்க உத்தரவிட்டாா். மாணவிகளுக்கு பள்ளி தாளாளரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.