திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, அவரது மகன் கைலாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தா்களுக்குத் தேவையான கூடுதல் வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும். குறிப்பாக, குடிநீா், கழிப்பறை, இளைப்பாறும் கூடங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும். இந்தக் கூடங்களை அனைத்து நாள்களிலும் திறந்து வைக்க வேண்டும். உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடியின் ரூ.14 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை தனது வேலையை சரியாகச் செய்துள்ளது என்றாா்.
சொத்து முடக்க விபரம்:-விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















