அஞ்சலக சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் சேர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக அஞ்சல் துறை பல்வேறு கூடுதல் வசதிகளை, கட்டணமின்றி அளித்து வருகிறது.
ஏடிஎம் அட்டை: கட்டணமின்றி வழங்கப்படும் இந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி, அனைத்து ஏடிஎம் மையங்களிலும் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். அஞ்சலகங்களில் வைக்கப்பட்டுள்ள ஏடிஎம்களில் எத்தனை முறை பரிவர்த்தனைகள் மேற்கொண்டாலும் அதற்கு கட்டணம் இல்லை. வங்கி ஏடிஎம்களில், ஒரு மாதத்தில் நான்காவது முறையாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனையிலிருந்து குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மொபைல் பேங்கிங் சேவை: மொபைல் செயலியை, மொபைல் போனில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்-லைன் வாயிலாக ஆர்டி / டிடி கணக்குகளைத் துவக்க முடியும். ஆன்-லைன் வாயிலாக சேமிப்புக் கணக்கிலிருந்து, ஆர்டி / பிபிஎஃப் / எஸ்எஸ்ஏ கணக்குகளுக்கு டெபாசிட் செய்ய முடியும். மொபைல் பேங்கிங் வாயிலாக ஏடிஎம் அட்டை மற்றும் காசோலைக்கான கோரிக்கைகளை விடுக்கலாம்.
ஈ பேங்கிங்: இதனைப் பயன்படுத்தி அஞ்சலக சேமிப்புக் கணக்குகளுக்கு இடையே நிதி பரிமாற்றம் செய்யலாம். ஆன்-லைன் வாயிலாக ஆர்டி / டிடி கணக்குகளைத் துவக்கவும், முடிக்கவும் முடியும். அஞ்சலகத்தில் உள்ள கணக்கில் இருக்கும் நிலுவைத் தொகையையும் பார்வையிடலாம்.
இந்தப் பெருந்தொற்று காலத்தில், அஞ்சலகத்திற்கு நேரில் வராமல் வாடிக்கையாளர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம் என்று சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் தலைமை அஞ்சலக அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.