பிரதமர் நரேந்திர மோடி ஈரோடு, விழுப்புரம், தேனி, ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் 18 தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு காணொளி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் தமிழ்நாட்டின் ஈரோடு, விழுப்புரம்,தேனி,ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் 18 தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார்.
திட்டம் பற்றிய சுருக்கமான விவரங்கள்:
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டம் என்பது மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.சுகாதார உள்கட்டமைப்பில் நிலவும் முக்கிய இடைவெளிகளை நீக்குவது மற்றும் பொது சுகாதார அமைப்புமுறையை வலுப்படுத்துவது, இதன் நோக்கமாகும். எதிர்கால சுகாதார அவசர நிலைகளுக்குத் தயாராகும் வகையில் ஆரம்பம் முதல் தீவிர சிறப்பு சிகிச்சை நிலை வரையிலான சுகாதார சேவைகளை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வலுவான சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நாடு முழுவதும் உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்கு, குறிப்பாக மாவட்ட அளவிலும் மற்றும் அதற்கு கீழே உள்ள பொது மருத்துவமனைகளின் தற்போதைய கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற உண்மையை கோவிட்-19 பெருந்தொற்று எடுத்துக்காட்டியது.
தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவுகள் (சி.சி.பி-கள்) மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு முக்கியமான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான திறனை மேம்படுத்துகின்றன.குறிப்பாக பெருந்தொற்று மற்றும் பிற சுகாதார நெருக்கடிகளின் போது அவசரகால எதிர்வினைத் திறனை அதிகரிக்கின்றன.
ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள மாவட்டங்களில் தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன. திட்டத்தின் கீழ் மொத்தம் 602 மாவட்டங்களில் இந்தப் பிரிவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவுகள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள்/ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள், உயிர் காக்கும் அமைப்புமுறைகளுடன் கூடிய 50/100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவுகளை நிறுவுவதன் மூலம் இந்தத் திட்டம் மாவட்ட அளவில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தும்.இதன் மூலம் தற்போதுள்ள மாவட்ட மருத்துவமனை அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்தர மருத்துவ சேவை,ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள், மருத்துவ அவசர காலங்களில் மேம்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் பெருந்தொற்றுகளை நிர்வகிக்க மருத்துவமனைகளை தயார்படுத்துதல் முதலியவற்றிற்கு இவை ஒருங்கிணைந்த பங்கு வகிக்கும்.
இந்த இடையீடு, பெருந்தொற்றுகள் அல்லது தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உறுதியான சிகிச்சை மற்றும் நிர்வாகத்தை வழங்குவதற்கான திறனை மாவட்ட அளவில் அதிகரிக்க உதவும். இதனால் சமூகங்களுக்கு சிறப்பு மருத்துவ சேவை அளிக்கப்படும். இந்தப் பிரிவுகள்,அவசரகால மருத்துவ மேலாண்மையில் சுகாதார நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமாகவும் செயல்படும்.
இத்தகைய வசதிகளை பிரதமர் துவக்கி வைப்பது/ நாட்டிற்கு அர்ப்பணிப்பது, இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவுகளைக் கட்டமைப்பதற்காக மாநிலங்களுக்கு ரூ. 17,201.38 கோடி வழங்க நிர்வாக ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுக்கான திட்ட மதிப்பீடு: ரூ. 151.35 கோடிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.