புரட்டாசி சனிக்கிழமை – தரிசனத்திற்கு விடாமல் கோவிலை பூட்டும் திட்டமா? இந்து முன்னனி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை
கடந்த ஐந்து மாதங்களாக உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள் அனைத்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்து விடப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் முதல் அனைத்து கோயில்களும் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டது. அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் வரிசையாக நின்று சமூக இடைவெளியுடன் வழிபட்டு வருகின்றார்கள்.
இந்த சூழ்நிலையில் தமிழ் மாதமான புரட்டாசி மாதம் வருகின்றது. இந்த புரட்டாசி மாதம் வைணவ சமயத்தின் சிறப்புமிக்க மாதம், இந்த புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமை விசேஷமானது. இந்நாளில் பெருமாளை வணங்குவது நன்மை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த புரட்டாசி சனிக்கிழமை பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு, அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கலாம் என்று அரசு கூறியிருக்கிறது.
ஆனால் சில மாவட்டங்களில் சில ஆட்சியாளர்கள் இந்த புரட்டாசி சனிக்கிழமை ஆலயத்தை மூடுவதற்காக முயற்சி செய்வதாக தகவல் வருகின்றது. இந்த விசேஷ காலகட்டத்தில் கொரோனா பிடியிலிருந்து மக்கள் மனநிம்மதி பெற ஆலய தரிசனம் சிறந்தது என பக்தர்கள் எண்ணுகின்றார்கள்.
ஆகவே, உடனடியாக தமிழக அரசு ஏற்கனவே உள்ளது போல அனைத்து சனிக்கிழமைகளிலும், அனைத்து வைணவத் திருத்தலங்களிலும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆவண செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கடிதம் : காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்,இந்து முன்னனி இயக்கம்.