ஒவ்வொரு மாநிலத்திலும் ரெம்டெசிவிர் தேவையைக் கருத்தில் கொண்டு, அது போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்ய, 2021 மே 16ஆம் தேதி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட ரெம்டெசிவிர் குப்பிகளின் விவரத்தை மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு சதானந்த கவுடா இன்று அறிவித்தார். இது நாடு முழுவதும் ரெம்டெசிவிர் சுமூகமாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் எனவும், எந்த நோயாளியும் சிரமத்தை சந்திக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மே 9ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரெம்டெசிவிர் பற்றி கடந்த 1ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மே 16ஆம் தேதி வரையிலான புதிய ஒதுக்கீடு பட்டியலை மருந்துகள் துறையும், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகமும் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளதாக அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மருந்துகள் துறை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழகத்துக்கு 2,05,000 ரெம்டெசிவிர் குப்பிகளும், புதுவைக்கு 11,000 குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதே போல் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தை நியாயமாகப் பயன்படுத்த, இவற்றின் விநியோகத்தை முறையாகக் கண்காணிக்கும்படி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஒதுக்கீடு தவிர, ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க, விற்பனை நிறுவனங்களுடன் ஆர்டர் கொடுக்காமல் இருந்தால், அவற்றை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, ரெம்டெசிவிர் மருந்துகளின் விவரத்தை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.