கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைபொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகமாக நடைபெறுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதால் மாவட்ட காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவஸ்தலம் பகுதியில் குலசேகரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அங்கு வந்த இரு நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அருகில் உள்ள மசூதியில் தொழுகைக்கு வந்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட போலீசார் இருவரையும் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
இவர்கள் குலசேகரம் அருகே காவஸ்தலம் பகுதியை சேர்ந்த ரபீக் 40, ஜலீல் 42, என்பது தெரியவந்தது. மேலும்,காவல்துறையின் அதிரடி விசாரணையில் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு குடோனில் மினி லாரியில் நூதன முறையில் சாக்கு மூட்டைகளில் வாழைத்தார் மற்றும் வெங்காயம் போன்றவற்றின் அடி பகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கி கடத்தி சென்று குடோனில் இறக்கி விட்டு வந்ததும் தெரிய வந்தது.
சுமார் இரண்டரை லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவர்களது பதிவு செய்யாத இரு சக்கர வாகனத்தில் பிரெஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதை பார்த்த போலீசார் விசாரித்ததில், ரபீக் என்பவர் தமிழ்நாடு சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பை நடத்தி வருவதாகவும், சமூக சேவகர் என்ற பெயரை சொல்லி அப்பகுதியில் பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் அம்பலமானது. இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த குலசேகரம் போலீசார் அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.