நாட்டின் பொது ஒலிபரப்பு நிறுவனமான சென்னை அகில இந்திய வானொலியின் செய்திப்பிரிவு, வரும் ஓராண்டு காலத்திற்கு, அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய செய்திச் சித்திரம் ஒன்றை ஒலிபரப்புகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்படும் இந்நிகழ்ச்சி “விடுதலைப் போராட்ட நாயகர்கள்” என்ற தலைப்பில், தலா பத்து நிமிடங்களுக்கு ஒலிபரப்பாகும்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை மணி 6.45 “செய்திக்கதம்பம்” நிகழ்ச்சியில் சென்னை அலைவரிசை ஒன்றில் இது ஒலிபரப்பாகிறது. இதனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல் செய்யும். அதன் மறுஒலிபரப்பு, அதே நாள் மாலை மணி 7.45-க்கு எஃப்எம் கோல்டு அலைவரிசையில் ஒலிபரப்பாகும். எஃப்எம் ரெயின்போ பண்பலையில் இதே நிகழ்ச்சி காலை 9 மணி செய்திச்சுருக்கத்தைத் தொடர்ந்து இடம்பெறும். பெரிதும் அறியப்படாத விடுதலை வீரர்களின் தியாகம் நிறைந்த வரலாறு இதில் சித்தரிக்கப்படும்.
குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த தியாகிகள் இதில் முக்கியத்துவம் பெறுவார்கள். மேலும், நாட்டின் விடுதலைப் போராட்டம் நிகழ்ந்த புகழ்மிக்க இடங்கள், முக்கிய விடுதலைப் போராட்ட இயக்கங்கள் போன்றவையும் இந்த செய்தி சித்திரத்தில் இடம்பெறும். புகழ்மிக்க வரலாற்றாசிரியர்கள். எழுத்தாளர்கள். மூத்த பத்திரிகையாளர்கள் ஆகியோர் எழுதி வழங்கியுள்ள இந்த நிகழ்ச்சியை செய்தி சித்திரமாக மாநில செய்திப் பிரிவு வடிவமைக்கிறது. நாட்டின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்த ஓராண்டு கால நிகழ்ச்சி ஒலிபரப்பாக உள்ளது.