கல்குவாரியில் ரூ.700 கோடி ஊழல்! சபாநாயகர் அப்பாவு தொகுதியில் தான் கல் குவாரி கொள்ளை அதிகமாம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

NellaiMiningScam

NellaiMiningScam

திருநெல்வேலியை விற்கும் தமிழ்நாடு அரசு.திமுக MP மற்றும் ஒரு IAS அதிகாரி இணைந்து திமுக MLA தொகுதி உட்பட திருநெல்வேலி முழுவதும் என்ன என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று அறப்போர் இயக்கம் ஓரு பெரிய அறிக்கையை வெளியிட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் அப்பாவு தொகுதியில் தான் அதிக அளவில் கல் குவாரி கொள்ளை நடந்துள்ளது. 53 கல் குவாரிகளில் 1 கோடி கன மீட்டருக்கு மேல் சட்ட விரோதமாக கொள்ளை போயுள்ளது. தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?

திருநெல்வேலி மாவட்டம் 53 குவாரிகளில் ஏற்பட்ட இழப்பும் திருப்பூரில் ஒரு குவாரியில் ஏற்பட்ட இழப்பும் சேர்த்து மொத்தமாக கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கல்குவாரி உரிமையாளர்கள் ஜெயகாந்தன் IAS அவர்களின் கூட்டு சதியோடு ரூபாய் 700 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக சம்பாதித்துள்ளனர் என்பது தெரிகிறது.

ராதாபுரம் MLA ஆகிய அப்பாவு அவர்களும் இந்த சட்ட விரோத குவாரிகளை மூடுவதற்கு பதிலாக எப்பொழுது திறக்கப்படும் என்று அப்போதைய ஆட்சியர் விஷ்ணுவிற்கு அழுத்தம் கொடுத்தது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. மேலும் இந்த புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் அமைச்சர் துரைமுருகன் அவர் துறையில் நடக்கும் சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். என கூறியுள்ளது மேலும்

அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி :
தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்க துறையில் நடந்த ரூபாய் 700 கோடி ஊழல் குறித்த ஆதாரங்களையும் புகாரையும் அறப்போர் இயக்கம் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்புத் துறையில் சமர்ப்பித்துள்ளது. முக்கியமாக திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த கனிமவள கல்குவாரி ஊழல் குறித்த ஆதாரங்களை துல்லியமாக சேகரித்து அவற்றை விசாரணை அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளோம்.

புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு 2022 இல் ஆணையராக இருந்த ஜெயகாந்தன் IAS, 53 குவாரி உரிமையாளர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் பிரதிநிதிகளாகவும் கட்சியில் பொறுப்பும் வகித்துக் கொண்டிருக்கும் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் திரு ஞான திரவியம் அவர்கள் மீதும், SAV குழு உரிமையாளர் மற்றும் திமுக பிரமுகர் திரு கிரகாம்பெல் மீதும் மற்றும் பலர் மீது ஊழல் வழக்கிற்கான FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறையை கோரியுள்ளோம்.

2022 மே மாதத்தில் திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் என்னும் இடத்தில் சங்கரநாராயணன் என்பவரின் குவாரியில் சட்டவிரோதமாக விதிகளை மீறி மிகப் பெரிய அளவில் கல் குவாரி வெட்டி எடுக்கப்பட்டதால் அவை எந்த பாதுகாப்பும் இன்றி சரிந்து விழுந்து நான்கு பேர் இறந்தனர். இதன் பிறகு அப்போதைய புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனராக இருந்த திரு நிர்மல்ராஜ் IAS அவர்கள் உடனடியாக பல மாவட்ட அதிகாரிகளைக் கொண்டு ஒரு ஆய்வுக் குழு அமைத்து அனைத்து குவாரிகளையும் விதிமீறல்களுக்கு ஆய்வு செய்ய உத்தரவிட்டார். ஆய்வுக்குழு அனைத்து குவாரிகளையும் சோதனை செய்து 54 குவாரிகளில் 53 குவாரிகள் விதிகளை மீறி நடப்பதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கைகள் மீது சேரன்மாதேவி துணை ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி கோட்டாட்சியர் இருவரும் அவர்கள் பகுதியில் உள்ள குவாரிகளுக்கு ஆய்வுக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விதிமீறலுக்கு ஏற்ப அபராதம் விதித்தனர்.

அறப்போர் இயக்கம் விதிமீறல்கள் நடந்த 53 குவாரிகளில் துணை ஆட்சியர் ஆணையிட்ட 24 குவாரிகளின் ஆணைகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெற்றது. ஒவ்வொரு குவாரியும் எத்தனை கன மீட்டர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அளவைவிட அதிகமான சாதாரண கற்களும், கிராவலும் வெட்டி எடுத்தார்கள் என்பதையும் அதன் மீது துணை ஆட்சியர் போட்ட அபராதங்களையும் கீழே காணலாம். மிக முக்கியமாக 24 குவாரிகளில் மட்டுமே கிட்டத்தட்ட 50 லட்சம் கன மீட்டருக்கும் மேலான சாதாரண கற்கள் மற்றும் கிட்டத்தட்ட 5.5 லட்சம் கன மீட்டருக்கும் மேலான கிராவல் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

சோதனை செய்து ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்த உடன், உடனடியாக ஜூன் 2022-ல் இயக்குனர் நிர்மல் ராஜ் IAS பதவி மாற்றம் செய்யப்பட்டு ஜெயகாந்தன் IAS ஆணையராக பணியமர்த்தப்படுகிறார். மற்றொருபுறம் 54 குவாரிகளில் 53 குவாரிகளில் சட்டவிரோத கனிம வள கொள்ளை நடைபெற்றுள்ளதால் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு IAS அனைத்து குவாரிகளையும் தற்காலிகமாக மூடுகிறார்.

ஜூலை 2022 இல் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அப்பாவு மற்றும் திருநெல்வேலி எம்பி ஞான திரவியம் நேரடியாக கலெக்டர் விஷ்ணுவிற்கு ஒரு பத்திரிக்கை சந்திப்பில் அழுத்தம் கொடுத்ததை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.

சட்டவிரோத கல்குவாரி அபராதங்களில் மிக முக்கியத் தொகையானது ஒவ்வொரு குவாரி உரிமையாளரும் எந்த அளவிற்கு சட்டத்தை மீறி சாதாரண கற்களையும் கிரவலையும் அள்ளுகிறார்களோ அதற்கான ராயல்டி மற்றும் அபராதம் மட்டுமின்றி முழு விலையை அவர்களிடமிருந்து மீட்க வேண்டும் என்பது சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்( மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957 இல் உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே பலமுறை உச்ச நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயங்கள் தன்னுடைய தீர்ப்புகளில் தெரிவித்துள்ளது.

இதன்படி தான் மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர்கள் தங்களுடைய ஆணைகளில் ராயல்டி தவிர சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்ட கனிம வளத்திற்கு அதற்கான விலையையும் சேர்த்து அபராதம் போட்டது. அதன்படி 24 குவாரிகளில் உள்ள சட்டவிரோத கனிம வள கொள்ளைக்கு துணை ஆட்சியர் சேரன்மாதேவி அக்டோபர் நவம்பர் 2022 மாதங்களில் போட்ட மொத்த அபராத தொகை ரூ262 கோடி ஆகும்.

இந்த ஆணையின் மீது கல்குவாரி உரிமையாளர்களுக்கு பிரச்சனை இருந்தால் அவர்கள் சட்ட விதிகளின்படி மாவட்ட ஆட்சியரை அணுக வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக நேரடியாக சட்ட விரோதமான அனைத்து குவாரி உரிமையாளர்களும் நவம்பர் டிசம்பர் 2022 இல் நேரடியாக புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையரான திரு ஜெயகாந்தன் IAS இடம் மேல்முறையீடு செய்கின்றனர். அவருக்கு நேரடியாக முதல் மேல்முறையீடு விசாரணை நடத்த வழியில்லை என்று தெரிந்தும் கூட சட்டவிரோதமாக மேல்முறையீடு விசாரணை நடத்தி 262 கோடி அபராத தொகையை வெறும் 13.8 கோடியாக குறைக்கிறார்.

அதாவது சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சாதாரண கற்கள் மற்றும் கிராவலின் விலையை மீட்காமல் ராயல்டியை மட்டும் வாங்கிவிட்டு அனைத்து சட்ட விரோத கொள்ளைகளையும் சட்டபூர்வமாக்குகிறார். இதன் மூலம் ஊழல்வாதிகளையும் ஊழல்களையும் காப்பாற்றி திருநெல்வேலி மாவட்ட சுற்றுச்சூழலுக்கும் அங்கு வாழும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறார். மூடிய குவாரிகளை மீண்டும் திறந்து, அபராத தொகையையும் மிகப்பெரிய அளவில் குறைந்தது மட்டும் இல்லாமல் மேலும் ஒரு படி சென்று அந்த அபராத தொகையையும் மாதத் தவணையில் கட்டலாம் என்று ஆணை போடுகிறார், இதுவே எவ்வாறு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் ஊழல்வாதிகளின் உடன் கூட்டு சதி செய்கிறார் ஆணையரான திரு ஜெயகாந்தன் IAS என்று காட்டுகிறது.

உதாரணத்திற்கு 3,82,782 கன மீட்டர் சட்டவிரோதமாக சாதாரண கற்களும் 68,472 கன மீட்டர் சட்டவிரோதமாக கிரேவல் அள்ளிய ராஜேந்திரனின் குவாரியில் சேரன்மாதேவி துணை ஆட்சியர் 20 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கிறார். ஆனால் ஜெயகாந்தன் ஐஏஎஸ் அதை சட்டவிரோதமாக மேல்முறையீடு விசாரணை செய்தது மட்டுமின்றி அந்த 20 கோடி அபராதத்தை வெறும் 73 லட்சமாக குறைத்தார். அதுமட்டுமின்றி அந்த 73 லட்சத்திலும் முதலில் 20 லட்சம் கட்டினால் போதும் என்றும் மீதி பணத்தை தவணை முறையில் மாதம் 5 லட்சமாக கட்டலாம் என்றும் ஆணையிட்டார்.

குவாரி உரிமையாளர்கள் ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகளாக பல இடங்களில் இருப்பதால் ஜெயகாந்தன் IAS மற்றும் இந்த குவாரி உரிமையாளர்கள் பலர் கூட்டு சதி செய்து அபராதனங்களை மிகப்பெரிய அளவில் குறைத்து சட்டவிரோத குவாரிகளை மீண்டும் திறக்க வைத்து உள்ளனர்.

உதாரணத்திற்கு SAV குழு மற்றும் அதனை சார்ந்தவர்கள் நடத்தும் நான்கு குவாரிகளின் விவரங்களை புகாரில் கொடுத்துள்ளோம். துணை ஆட்சியர் இந்தக் குவாரிகளின் சட்டவிரோத கனிமவள கொள்ளைக்கு விதித்த அபராத தொகை 60 கோடி ஆகும். ஆனால் இதை ஜெயகாந்தன் ஐஏஎஸ் வெறும் 3.7 கோடியாக குறைக்கிறார். SAV குழுவின் பிரதான பொறுப்பாளர்களில் ஒருவரான கிரகாம்பெல் திமுக கிழக்கு மாவட்ட அவைத்தலைவராக உள்ளார். திமுகவில் மிகுந்த அரசியல் செல்வாக்கு உள்ளவராக அந்த மாவட்டத்தில் வலம் வருகிறார்.

மற்றொரு முக்கிய உதாரணம் இன்று பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஞானதிரவியம் அவர்கள். ஞான திரவியம் மற்றும் அவர் மகன் தினகரன் ராதாபுரம் பகுதியில் குவாரி மற்றும் அன்னை ப்ளூ மெட்டல்ஸ் கிரஷர் நடத்தி வருகின்றனர். 2022 இல் குவாரிகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் தினகரனின் டாரஸ் வண்டி சட்டவிரோதமாக கிரேவல் கடத்திச் சென்றதற்காக அவர் மீது FIR பதியப்பட்டது.

அதுமட்டுமின்றி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் இசக்கியப்பன் என்னும் பெயரிலே குவாரி நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இசக்கியப்பன் ஞான திரவியம் மகன் தினகரனுடன் சேர்ந்து 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்துடன் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் விநியோகித்துக் கொண்டிருந்தபோது பிடிபட்டு FIR பதிவு செய்யப்பட்டது.

மேலும் இசக்கியப்பன் அன்னை ப்ளூ மெட்டல் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய ஒரு நபர் என்று அந்தப் பகுதியில் அறியப்படுகிறார். 2021 அப்பொழுதைய துணை ஆட்சியர் சிவகார்த்திகேயன் ராதாபுரத்தில் உள்ள இசக்கியப்பன் குவாரியை சோதனை செய்தபோது கிட்டத்தட்ட 4 லட்சம் கன மீட்டர் சாதாரண கற்கள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டு அவருக்கு 20 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அந்த துணை ஆட்சியர் சிவா கிருஷ்ணமூர்த்தி மற்றும் SP மணிவண்ணன் உடனடியாக அங்கிருந்து பதவி மாற்றம் செய்யப்பட்டனர். சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் எப்படி ஞான திரவியம் மற்றும் ஆளும் திமுக அரசால் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இது மட்டும் இன்றி ஜெயகாந்தன் IAS அதிக விதிமீறல்கள் செய்து மூட ஆணையிட்ட குவாரிகளையும் சொற்ப அபராதத்திற்கு திறந்து விடுகிறார். அதிக விதிமீறல்கள் செய்த கே கே எம் ப்ளூ மெட்டல்ஸ், ராஜேந்திரன் சுகு என்பவர் பெயரில் நடத்தும் கஸ்தூரிரங்கபுரம் கிராம குவாரியில் 11 லட்சம் கன மீட்டர் சாதாரண கற்கள் சட்டவிரோதமாக அல்லப்பட்டிருந்த போதிலும் ஆட்சியர் விஷ்ணு இதன் குவாரி அனுமதியை ரத்து செய்து இருந்த போதிலும் ரூபாய் 60 கோடிக்கு மேல் அபராதம் விதிக்க வேண்டிய இந்த குவாரிக்கு வெறும் 8 கோடி ரூபாய் அபராதம் விதித்து அதை மீண்டும் திறந்து விடுகிறார்.

அதுமட்டுமின்றி பல குவாரிகள் பக்கத்தில் உள்ள அரசாங்க நிலங்களிலும் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிரேவல் வெட்டி எடுத்து கொள்ளையடித்து உள்ளனர். பெருங்குடி கிராமம் ஸ்டான்லி ராஜா தனது பக்கத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான சர்வே எண் 1397 மலையை காலி செய்து வருவது தெரியவந்துள்ளது. அதேபோல் ராஜ்குமார் மற்றும் இஸ்ரவேல் போன்றோர் அரசு வாங்க விற்க தடை செய்து உள்ள PACL நிலங்களில் குவாரிகள் அமைத்து சட்டவிரோதமாக நடத்தி வருவது அறப்போர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இடைக்கால் என்னும் கிராமத்தில் OSR க்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்களில் ஆதாரம் ப்ளூ மெட்டல்ஸ் ஜெகன் என்பவர் குவாரி நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. மேலும் குவாரிகள் மூடப்பட்டிருந்த காலகட்டத்தில் ஊர் பொதுமக்கள் RRM ப்ளூ மெட்டல் சட்டவிரோதமாக கடத்திய எம்சாண்ட் லாரியை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

திருநெல்வேலி மட்டுமின்றி திருப்பூரிலும் கோடங்கி பாளையம் என்னும் கிராமத்தில் சட்டவிரோதமாக நடந்து வரும் கல்குவாரி குறித்த ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் புகாரியில் இணைத்துள்ளது. இதிலும் ஜெயகாந்தன் IAS ரூபாய் 103 கோடி அளவில் போட வேண்டிய அபராதத்தை வெறும் 10 கோடி அளவில் மட்டும் போட்டுவிட்டு ரூபாய் 93 கோடி அளவில் தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்படுத்துகிறார்.

எனவே தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக பெற்ற ஆதாரங்களின் அடிப்படையிலும் ஆய்வின் அடிப்படையிலும் திருநெல்வேலி மாவட்டம் 53 குவாரிகளில் ஏற்பட்ட இழப்பும் திருப்பூரில் ஒரு குவாரியில் ஏற்பட்ட இழப்பும் சேர்த்து மொத்தமாக கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கல்குவாரி உரிமையாளர்கள் ஜெயகாந்தன் IAS அவர்களின் கூட்டு சதியோடு ரூபாய் 700 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக சம்பாதித்துள்ளனர் என்பது தெரிகிறது.

ராதாபுரம் MLA ஆகிய அப்பாவு அவர்களும் இந்த சட்ட விரோத குவாரிகளை மூடுவதற்கு பதிலாக எப்பொழுது திறக்கப்படும் என்று அப்போதைய ஆட்சியர் விஷ்ணுவிற்கு அழுத்தம் கொடுத்தது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. மேலும் இந்த புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் அமைச்சர் துரைமுருகன் அவர் துறையில் நடக்கும் சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
என்று அறப்போர் இயக்கம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version