மோகன்ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படம் வெளியான முதல் காட்சியிலேயே பலரது புருவத்தையும் உயரச் செய்துள்ளது. அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக சிறு முதலீட்டு படங்கள், அதாவது பெரிய நடிகர்கள் நடிக்காத படங்கள், வெளிநாடுகளில் வெளியிடப்படுவதில்லை. ஆனால் ருத்ர தாண்டவம் திரைப்படம், ஏராளமான வெளிநாடுகளில் திரையிடப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனை.
நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிஷி ரிச்சர்ட், இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் நடிகர்கள் ராதாரவி, தம்பி ராமையா உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
குறிப்பாக கௌதம் மேனனின் நடிப்பு ரசிகர்களை பாகுபாடு இல்லாமல் பாராட்ட செய்துள்ளது. மிகவும் யதார்த்தமாக அவர் நடித்துள்ளார்.
அதேபோல படத்தின் பின்பகுதியை அதிகமாக ஆக்கிரமித்து இருப்பது நடிகர் ராதாரவியும், அவரது உடல் மொழியும், அனுபவமிக்க நடிப்பும்தான்.
இந்த திரைப்படத்தின் வசனம் தனி முத்திரை பதித்து உள்ளது. முதல் பாதியை விட, இரண்டாவது பாதி படம் மிகவும் விறுவிறுப்பாகவும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.
படத்தின் பின்னணி இசை, இசையமைப்பாளர் யார் என்று கேட்க வைக்கிறது. இசை அமைப்பாளர் ஜூபின் கவனிக்க வைத்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மொத்தத்தில் ருத்ரதாண்டவம் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது. மிகச்சிறந்த வெற்றிப்பட வரிசையில் ருத்ரதாண்டவம் திரைப்படமும் அமைந்து உள்ளது.
மோகன்ஜியின் முந்தைய படமான திரௌபதி திரைப்படம், தயாரிப்பு செலவை விட, 20 மடங்கு வசூல் செய்து கொடுத்தது. ஆனால் ருத்ரதாண்டவம் திரைப்படம் அதற்கு பல படிகள் மேல் வசூல் செய்து கொடுக்கும் என்பதே உண்மை.
இதில் மற்றொரு முக்கிய அம்சம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா துறையையும் கவனிக்க செய்துள்ளது. அதாவது கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு, சூர்யா, விஜயசேதுபதி போன்ற மார்க்கெட் உள்ள பெரிய நடிகர்களேகூட திரையரங்குகளில் தங்களின் திரைப்படங்களை வெளியிட பயந்து போனார்கள். நடிகர் சூர்யாவின் அடுத்த படமான ஜெய்பீம் திரைப்படம்கூட ஓ.டி.டியில்தான் வெளியாக உள்ளது.
சமீபத்தில் தமிழக திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் மிக மிகக் குறைவாக இருந்ததே இதற்கான முக்கிய காரணம். திரையரங்கு பக்கம் ரசிகர்கள் வருவது குறைந்து போய், அது திரையரங்குகளுக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வருவதை குறைத்து விட்டது.
பெரிய நடிகர்களின் படங்களுக்கே இந்த நிலைமை என்றால், சிறுமுதலீட்டு படங்களின் நிலை எப்படி இருக்கும்?
திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு விட்டோம் என்று சொல்வதற்காக மட்டுமே, திரையரங்குகளில் பல படங்களை வெளியிட்டார்கள். அதோடு மிகப்பெரிய நஷ்டத்தை அவர்கள் அடைந்தார்கள். இது திரை உலகத்தில் உள்ள ஒவ்வொரு தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மிக துணிச்சலாக ருத்ரதாண்டவம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மோகன்ஜி. அவரது எதிர்பார்ப்பையும் மீறி, முதல் நாளின் முதல் காட்சியிலேயே ஏராளமான திரையரங்குகள் அரங்கம் நிறைந்த காட்சிகளாக நிரம்பி வழிந்துள்ளன.
நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்கள் நடித திரைப்படமாக இல்லாமல் இருந்தபோதிலும், திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை ஈர்த்துள்ளது ருத்ரதாண்டவம் திரைப்படம்.
ருத்ரதாண்டவம் திரைப்படம், தமிழ் சினிமாவை வாழ வைத்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.
அதோடு புது ரசிகர்களையும், திரைப்படம் பார்த்து 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் கடந்துபோன ரசிகர்களையும் மீண்டும் திரையரங்குகள் பக்கம் திருப்பியுள்ளது இந்த திரைப்படம்.
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு சிறு முதலீட்டு திரைப்படம் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்களின் திரைப்படத்தை போன்று தாரை, தப்பட்டை முழங்க ரசிகர்கள் முதல் காட்சியை கொண்டாடி தீர்த்துள்ளார் என்றால் அது ருத்ரதாண்டவம் திரைப்படமாகதான் இருக்கும்.
இந்த திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியை அடைவதற்கு ஒரே ஒரு காரணம்தான். இந்த திரைப்படம் உண்மையைப் பேசுகிறது. அது ரசிகர்களின் மனதோடு ஒன்றிப் போகிறது. ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
எனவே ருத்ரதாண்டவம் திரைப்படம், தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சி உள்ளது. இதுபோன்ற பல படங்கள் வருகின்ற காலங்களில் திரைக்கு வந்து, மிகப்பெரிய வெற்றிகளை குவித்து, சாதனை சரித்திரங்களை படைக்கும் என்று நாம் நம்பலாம்.