கடந்த வியாழக்கிழமை சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் “புலி 3” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்வதற்கு மும்பை விமான நிலையம் வந்துள்ளார்கள்.
மும்பை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் சல்மான் கானை பாதுகாப்பு நெறிமுறையைப் பின்பற்றுமாறு மத்திய தொழித்துறை பாதுகாப்பு படை வீரர் கூறினார். இந்த சம்பவம் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சல்மான் விமான நிலைய முனையத்தை நோக்கி நடந்தபோது, சிஐஎஸ்எஃப் அதிகாரி அவருக்கு முன்னால் நின்று சைகை செய்தார். அவர் முதலில் பாதுகாப்பு சோதனைச் சாவடியிலிருந்து அனுமதி பெற வேண்டும்.அதன் பின் உள்ளே வாருங்கள் என சைகை செய்தார்.
இந்நிலையில், அந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவின.
இதனை மறுத்துள்ள சி.ஐ.எஸ்.எப்., டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ” சி.ஐ.எஸ்.எப்., அலுவலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆதாரம் இல்லை. உண்மையாக கடமையை நிறைவேற்றுவதில் முன்மாதிரியாக செயல்பட்ட அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது,”. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.