இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலவர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும்’ தி.மு.க.,வின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது’ தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்தநிலையில் வாக்குப்பதிவு நடைபெற்ற நாளில் கடலூரில் ஒரு பெண் குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்ரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (47), அவரது மனைவி கோமதி (43), மகன்கள் ஜெயபிரகாஷ் (24), சதீஷ்குமார் (22), தம்பி ஜெய்சங்கர் (45) ஆகியோர் நேற்று மாலை வாக்களித்துவிட்டு வீட்டுக்கு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 11 பேர் கொண்ட கும்பல், கத்தி மற்றும் மரக்கட்டையால் அவர்களை தாக்கியுள்ளது. இதில் கோமதி உட்பட ஐந்து பேருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு அனைவரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உடல்நலம் மோசமாக இருந்த கோமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கோமதி உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். திமுக பிரமுகர்களான ரவி, கலைமணிதான் இக்கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் : கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர், ஓட்டுப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன், தி.மு.க.,வினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு ஓட்டளிக்கவில்லை என்பதற்காக, தி.மு.க.,வினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினரை, தி.மு.க., அரசு இன்னும் கைது செய்ததாகத் தெரியவில்லை.
அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான ஓட்டளிக்கும் உரிமையைக்கூட, தங்கள் விருப்பப்படி தான் நடத்த வேண்டும் என்ற, தி.மு.க.,வின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது.
இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், முதலில் தன் கட்சிக்காரர்களிடம் இருந்து, தமிழக மக்களை காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும். உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு, அண்ணாமலை கூறியுள்ளார்.