தமிழக மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் பல்வேறு பதவிகளுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்த நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத் துறையும் தனி வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கில் அவர் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராகவே இருந்தார்.ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அதே சமயம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவருக்கு ஜாமீன் வழங்கியதில் முழு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கியதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில், பாலாஜி சீனிவாசன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் அபய் ஓகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போது சக்திவாய்ந்த நபராக இருந்தார். தற்போது அவர் அமைச்சராகி உள்ளதால், வழக்கில் தாக்கம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது” என வாதத்தை முன் வைத்தார். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள், போக்குவரத்துத் துறை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் உள்ள சாட்சியங்கள் குறித்த விவரங்களை ஜனவரி 15 ஆம் தேதிக்குள் தர உத்தரவிட்டு உள்ளனர்.மேலும், நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா? என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், “செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கில் தமிழக அரசு என்ன சொல்ல வருகிறது? கடந்த முறை பதில் சொல்கிறோம் எனக் கூறியதால் தான் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. ஆனால், தற்போது வரை தமிழக அரசு எந்தவொரு பதிலும் தரவில்லை. நோட்டீஸ் வேண்டாம் என மாநில அரசின் உத்தரவாதம் அடிப்படையில், உத்தரவை மாற்றினோம். நீதிமன்றத்தின் முடிவை தமிழக அரசு மதிக்கவில்லை என்பதால், நோட்டீஸ் அனுப்புகிறோம்” என நீதிபதிகள் அபய் ஒகா மற்றும் ஏ.ஜி. மாஸி அமர்வு கோபமாக தெரிவித்தது.
ஏற்கனவே செந்தில் பாலாஜி அமைச்சரான விஷயத்தில் பல கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தவழக்கை விரைவில் முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பது குறித்தும் உச்சநீதிமன்றம் ஆலோசனையில் உள்ளதாம். ஏனென்றால் செந்தில் பாலாஜி தரப்பு இந்த வழக்கை திசைதிருப்பவும் இழுத்தடிக்கவும் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறைக்கு எதிரான ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை திரும்ப பெறவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் ஜாமீன் ரத்து செய்யப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். இதனையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக பல்டி அடித்தது செந்தில் பாலாஜி தரப்பு. என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருட முற்பகுதிக்குள் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது உச்சநீதிமன்றம்.