உத்தர பிரதேசத்தில் குரான் ஒப்புவித்தல் போட்டி என ஆன்லைனில் ‘கேமிங் ஆப்’ வழியே குழந்தைகள் மற்றும் இளைஞர்களை தங்களது மதத்திற்கு மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக உ.பி., போலீசார் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
மத மாற்றம் விவகாரம் அவ்வபோது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் ‘கேமிங் ஆப்’ மூலமாக குழந்தைகள், இளைஞர்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக காசியாபாத் துணை போலீஸ் கமிஷனர் நிபுன் அகர்வால் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது: ஆன்லைன் விளையாட்டு என கூறி குழந்தைகளையும், இளைஞர்களையும் தங்களது இலக்காக வைத்து செயல்பட்டு உள்ளனர். இதன்படி, குரான் ஒப்புவித்தல் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெற வேண்டும் என கூறப்படுகிறது. இந்த முறையை பயன்படுத்தி, மதமாற்றம் செய்யும் முயற்சி நடந்து உள்ளது.
பிரபல இஸ்லாமிய மதபோதகர்களான ஜாகீர் நாயக் மற்றும் தாரீக் ஜமீல் ஆகியோரது வீடியோக்களையும் கேமிங்கில் ஈடுபடுபவர்களிடம் காட்டி உள்ளனர். இதுபற்றி கவிநகர் போலீசார் விசாரணை நடத்தி கடந்த மே 30-ந்தேதி மதமாற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளனர். இதில், மஹாராஷ்டிராவின் தானே நகரை சேர்ந்த ஷாநவாஸ் கான் என்ற பட்டூ மற்றும் சஞ்சய் நகர் பகுதியில் உள்ள மசூதியின் மதபோதகரான நன்னி என்ற அப்துல் ரகுமான் ஆகிய 2 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இதில் ரகுமானை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடந்த விசாரணையில், ஜெயின் சமூக சிறுவன் ஒருவன் மற்றும் இரண்டு ஹிந்து சிறுவர்களை மதம் மாற்றிய விவரம் கண்டறியப்பட்டது. தொடர்புடைய, மின்னணு சான்றுகள் மற்றும் பத்திரங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். தப்பியோடிய ஷாநவாஸ் கானை பிடிப்பதற்காக போலீசார் அடங்கிய குழு மஹாராஷ்டிரா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.