பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் ஒரு பகுதியான “ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல்” என்ற துணைத் திட்டத்தினை மத்திய வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனமுறைகளில், வயல்களில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சொட்டு நீர்ப் பாசன தொழில்நுட்பமானது, நீரை சேமிப்பது மட்டுமல்லாமல் உரப்பயன்பாடு, தொழிலாளர் ஊதியம் மற்றும் பிற செலவினங்களையும் குறைக்கிறது.
நடப்பாண்டில், இத்திட்டத்திற்காக ரூ.4000 கோடி வருடாந்திர ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடையக்கூடிய பயனாளிகளை மாநில அரசுகள் கண்டறிந்துள்ளன. சில மாநிலங்களுக்கு, 2020-21ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், நபார்டு வங்கியுடன் இணைந்து, ரூ.5000 கோடி மதிப்புள்ள குறு நீர்ப்பாசன நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை, குறு நீர்ப்பாசன நிதியாக தமிழ்நாட்டுக்கு ரூ.478.79 கோடியும், ஆந்திரப்பிரதேசத்திற்கு ரூ.616.14 கோடியும் நபார்டு வங்கி வாயிலாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 1.76 லட்சம் ஹெக்டேர் நிலம் பயன்பெறும்.