சோலார் பேனல் மோசடி சரிதா நாயர் கைது ! தி.மு.க எம்.பி மீதான லஞ்சம் வழக்கும் சூடுபிடிக்கிறதா! பதவி நீடிக்குமா?

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு, சோலார் பேனல் அமைத்துத்தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்தவர், சரிதா நாயர். கேரளாவில் பல்வேறு நீதிமன்றங்களில் அவர் மீது வழக்குகள் உள்ளன. தற்போது ஜாமீனில் வெளியே உள்ள சரிதா,நீதிமன்றங்களில் விசாரணைக்காக ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்துவந்துள்ளார். இவர் மீது கேரளா மட்டுமில்லாமல் கோவையிலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் சோலார் பேனல் ஊழலில் திமுக மூத்த தலைவரும், முன்னாள் நிதித்துறை இணை அமைச்சருமான பழனிமாணிக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக சோலார் பேனல் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர் தெரிவித்துள்ளார். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

கோவையில் சோலார் பேனல் அமைத்துக் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக இவர் மீது இரண்டு நிறுவனங்கள் கோவை குற்றப்பிரிவு போலீசில் வழக்கு தொடுத்து இருந்தன. இந்த வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சரிதா நாயர் நீதிமன்றத்திற்கு வந்த போது அவர் அளித்த பேட்டியில், ”சோலார் பேனல் மோசடி குறித்து விசாரிக்க கேரள அரசு விசாரணை கமிஷனை அமைத் துள்ளது.

இந்தக் கமிஷன் முன்பு அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். இதுவரை 13 பேர் மீது மோசடி ஆதாரங்களை அளித்துள்ளேன். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட 9 பேர் மீது டிஜிட்டல் ஆதாரங்களை அளித்துள்ளேன்.இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆரியாடு முகமது, அனில்குமார், முன்னாள் நிதித்துறை இணை அமைச்சரும், தி.மு.க. வை சேர்ந்த பழனிமாணிக்கம் பெயரும் இடம் பெற்றுள்ளது. என்றார்

இந்நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த அப்தூல் மஜீத் என்பவர் தொடர்ந்த பண மோசடி வழக்கில் கடந்த மாதமே தீர்ப்பு அளிப்பதாக இருந்தது. ஆனால் சரிதா நாயர் ஆஜராகாத காரணத்தால் இன்று கைது செய்யப்பட்டார். அதேபோல் மேலும் சிலருக்கு வழங்கிய காசோலைகளும் பணமின்றி திரும்பி வந்ததாகக் கூறப்பட்டது.

சரிதா நாயர் ஆஜராகமலும், தொடர்ந்து பலமுறை விசாரணைக்கு செல்லாததாலும் அவருக்கு கோர்ட் கைது வாரண்டு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் விரைந்த கோழிக்கோடு மாவட்டம் கசபா காவல் நிலையப் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.இந்த நிலையில் அவர் கூறிய அரசியல் புள்ளிகளின் வழக்குகளும் சூடு பிடிக்கும் என்றே தெரிகிறது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version