இந்தியா முழுவதும் மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சட்டம் என்றால் அது பொது சிவில் சட்டம் தான். அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம். மேலும் பொது சிவில் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் பலமுறை பேசியிருக்கிறது. தற்போது நடைமுறையில் மதங்களின் தனிநபர் சட்டம் என்பது திருமணம், விவகாரத்து, குழந்தைகள் பாதுகாப்பு, பரம்பரை தொடர்பானவையாகும்.
ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு தனிநபர் சட்டத்தை பின்பற்றுகிறது. இப்படியான அனைத்து மதங்களின் தனிநபர் சட்டங்களுக்கும் பொதுவான நெறிமுறைகளைக் கொண்டதாக பொது சிவில் சட்டம் வர வேண்டும் என்பது தான் அனைவரின் கருத்து. மதசார்பற்ற நாடு என சொல்லும் இந்தியாவில் எதற்கு மதங்கள் சார்ந்த சட்டம் என்ற கேள்வி எழுகிறது.
இந்திய அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவானது, இந்தியா முழுவதற்கும் அனைத்து குடிமக்களுக்குமான பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது. திருமணம், விவகாரத்து, தத்து எடுத்தல், வாரிசுரிமை,ஜீவனாம்சம் என பல்வேறு அம்சங்களில் மதங்கள் சார்ந்து தனிநபர் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதன் காரணமாக அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள், பொது சிவில் சட்டம் தேவை என்பதை ஏற்கனவே வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, குஜராத் மாநிலம் கேவாடியாவில் உள்ள அவரது சிலை முன்பு தேசிய ஒற்றுமை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பங்கேற்ற பிரதமர் ராணுவத்தினரின் சாகசங்களை கண்டுகளித்தார்.தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், பொது சிவில் சட்டம் மதச்சார்பற்ற சிவில் சட்டமாக இருப்பதாகவும் ஒரே நாடு ஒரே வரிமுறையான ஜிஎஸ்டி முறையை உலகமே வியந்து பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஒற்றுமைக்கான ஒரு முயற்சியே ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்முறை எனவும்,இத்திட்டமும் – பொது சிவில் சட்டமும் இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் எனவும் அவர் கூறினார்.வளர்ந்து வரும் இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க சிலர் பணியாற்றி வருவதாக எதிர்கட்சிகளை விமர்சித்தார்.
மத்திய அரசின் பொது சிவில் சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வரும். நாம் இப்போது பொது சிவில் சட்டம்’ என்ற இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறோம். இது இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். பொது சிவில் சட்டம் தேச ஒற்றுமைக்கு தேவையான ஒன்றாகும். ஒற்றுமை மூலமே வளர்ச்சி ஏற்படும். நாட்டை பலவீனப்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. சாதி ரீதியாக சமுதாயத்தை பிளவுப்படுத்துவது போன்றவற்றில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ராணுவத்தைக் கூட விமர்சனம் செய்து பலவீனப்படுத்த முயற்சி செய்கின்றன.
அதுமட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் முதல்வர் இந்த முறைதான் முதல் முறையாக இந்திய அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழியேற்று பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஒற்றுமைக்கான பயணத்தில் இது சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல். எனவும் கூறியுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றுக்கான மசோதாக்கள் கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















