மனோதர்பன் முன்முயற்சித் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் `நிஷாங்க்’ நாளை, ஜூலை 21ஆம் தேதி காலை 11 மணிக்கு மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் தொடங்கி வைக்கிறார். மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோட்ரேவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். உயர் கல்வித் துறையின் செயலாளர் அமித் காரே, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் திருமதி அனிதா கர்வால், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
கோவிட் நோய்த் தொற்று சூழ்நிலையில் மாணவர்களின் கல்வி கற்றல் முறையை தொடரச் செய்வது மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உணர்ந்தது என்று, தன்னுடைய வீடியோ ட்விட்டர் பதிவில் அமைச்சர் கூறியுள்ளார். எனவே, `மனோதர்பன்‘ என்ற பெயரிலான முன்முயற்சித் திட்டம் ஒன்றை அமைச்சகம் மேற்கொண்டது. கோவிட் நோய்ப் பரவல் காலத்திலும், அதற்குப் பிந்தைய காலத்திலும் மாணவர்களின் மன நலம் மற்றும் ஆரோக்கியத்துக்கு உதவும் வகையில் உளவியல் மற்றும் சமூகவியல் சார்ந்த அணுகுமுறைகளைக் கொண்டதாக இது இருக்கும்.
கோவிட் 19 நோய்ப் பரவலுக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டுவதற்கான தற்சார்பு இந்தியா என்ற உத்வேகம் ஏற்படுத்தும் தொகுப்புத் திட்டத்தை 12.05.2020இல் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்ததை அமைச்சர் குறிப்பிட்டார். மனித ஆற்றலைப் பலப்படுத்துதல், உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தல், கல்வித் துறையில் செம்மையான சீர்திருத்தம் மற்றும் சிறந்த முன்முயற்சிகள் போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாக தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் `மனோதர்பன்’ முன்முயற்சித் திட்டம் தொடங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்ளவும், அழுத்தம் இல்லாத வாழ்வை உருவாக்கிக் கொள்ளவும் இந்த முன்முயற்சித் திட்டத்தில் சேர வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு திரு. பொக்ரியால் அழைப்பு விடுத்துள்ளார்.
நிகழ்ச்சியை நேரலையில் காண பின்வரும் இணையதள சுட்டியை கிளிக் செய்யுங்கள் : http://webcast.gov.in/mhrd