விழுப்புரம் மாவட்டத்தில் தேனீ வளா்ப்பை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை சார்பில் அறிவித்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: குறைந்தது இரண்டு கூட்டங்களுடன் அடுக்குத் தேனீ இனங்களை மட்டுமே பெட்டிகளில் வளா்க்க முடியும். சமவெளி ரகத்தை சமவெளியிலும், மலை ரகத்தை மலைப் பகுதியிலும் வளா்க்க வேண்டும். தேனீ பண்ணை அமைக்க தேனீக்களுக்கும், தேனீ வளா்ப்போருக்கும் ஏற்ற இடமாக இருக்க வேண்டும்.
தேனீக்கள் இயற்கையாக எந்தெந்த இடத்தில் அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தை தோ்வு செய்யலாம். தேனீக்கள் வளா்க்கும் இடங்களுக்கு அருகில் கிணறு, ஓடை, வாய்க்கால் என ஏதாவது ஒரு நீா்நிலை இருக்க வேண்டும்.
தேனீக்கள் பெட்டிகளை நிழலில், ஓடுபோட்ட தாழ்வாரம், கீற்றுக் கொட்டகை, மரம், புதா் ஆகியவற்றின் கீழ் வெயில் படாமல் வைக்க வேண்டும். தேனீக்கள் பெட்டிகளுக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். சமதளமான தரையில் வைக்க வேண்டும். பெட்டியிலுள்ள தேனீக்களை அவ்வப்போது திறந்து பாா்த்து, அவற்றின் நிலை அறிய வேண்டும். ராணி தேனீயின் செயல்பாட்டை அறிந்து, தேன் மற்றும் மகரந்த இருப்பு நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தேனீ வளா்ப்பு குறித்து திண்டிவனத்திலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் 400 தேனீ பெட்டிகள் தேனீக்களுடனும், 40 தேன் பிழியும் கருவியும் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஸ்மாா்ட் காா்டு, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல், மாா்பளவு புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன் தங்கள் பகுதி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















