பிரதமர் மோடி தலைமையின் கீழ், உலகில், வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா அங்கீகரிக்கப்படுகிறது: எல் முருகன்.
பிரதமர் மோடி தலைமையின் கீழ், உலகில், வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா அங்கீகரிக்கப்படுகிறது என மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறினார்.சென்னையில் நடந்த வர்த்தகம் மற்றும் வணிக வார நிறைவு விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கின் கீழ், இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக அங்கீகரிக்கப்படுகிறது. ஏற்றுமதி துறையில் இடைவிடாத சீர்திருத்தங்கள், நல்ல பயன்களை அளித்துள்ளன. சீர்திருத்தங்கள், எளிதாக தொழில் செய்வது ஆகியவற்றின் மீது பிரதமர் திரு. நரேந்திர மோடி நம்பிக்கை வைத்துள்ளார். ஏற்றுமதி வளர்ச்சி துறை மற்றும் ஏற்றுமதி தொடர்பான சீர்திருத்தங்களிலும், நாம் இவற்றை காணலாம். சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை, ஏற்றுமதி சார்ந்த திட்டங்கள் மூலம் ஏற்றுமதியை வர்த்தகத்துறை ஊக்குவிக்கிறது. ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் இந்த இரு கொள்கைகளும் தமிழ்நாட்டில் வரவேற்பை பெற்றன. தமிழ்நாட்டில் 49 சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,500 நிறுவனங்களுடன் செயல்பாட்டில் உள்ளன. இவை தமிழகம் முழுவதும் உள்ளது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தமிழகத்தில் தேவையான வேலை வாய்ப்பு, சாதகமான பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்திய ஏற்றுமதி சேவை திட்டம் (SEIS), மத்திய மாநில வரி தள்ளுபடி திட்டங்கள் (RoSCTL), போக்குவரத்து மற்றும் சந்தை உதவி (TMA) மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் மூலதன பொருட்கள் திட்டம் போன்றவை ஏற்றுமதியாளர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவுகின்றன. https://www.youtube.com/watch?v=436YGpfOfzM&t=6s ஏற்றுமதியில், தமிழ்நாடு 3வது பெரிய மாநிலமாக தற்போது உள்ளது. மாநிலத்தின் ஏற்றுமதி ஆற்றல் மிகப் பெரியவை. சென்னையிலிருந்து வாகனங்கள், நாமக்கல்லில் இருந்து கோழி வளர்ப்புத் தொழில், திருப்பூர்,கோயம்புத்தூரில் இருந்து ஜவுளித் தொழில், வேலூரிலிருந்து தோல் தயாரிப்புகள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பலவிதமான பொருட்கள் தமிழ்நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்டங்களில், ஏற்றுமதி வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இது உள்ளூர் அளவில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும். இது மாவட்டங்களுக்கு மட்டும் அல்லாமல், ஊரக பகுதிகளிலும் பொருளாதார உந்துதலை கொண்டுவரும். ஒவ்வொரு மாவட்டத்தையும், ஏற்றுமதி மையமாக மாற்ற வேண்டும். இந்த தொலைநோக்குடன், மத்திய அரசின், மாவட்டங்களை ஏற்றுமதி மையமாக்கும் முயற்சி தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா உலகளவில் 4வது இடத்தில் உள்ளது.17 முதல் 18 சதவீத வேளாண் ஏற்றுமதி இந்தியாவில் இருந்துதான் நடக்கிறது. கடல்சார் துறையை உக்குவிக்க, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தை, ரூ.20,050 கோடி முதலீட்டில் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம், மீன்கள் ஏற்றுமதியை ரூ.46,662 கோடியிலிருந்து, 2024-25ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழக இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடற்பாசி விவசாயத்தில் உள்ள திறனை அங்கீகரிப்பது, கடலோர பகுதி மக்கள், சுயஉதவி குழுவினர், பெண்கள் வாழ்வில் மாற்றத்தை இத்திட்டம் கொண்டு வருகிறது. இந்தியாவில் முதல் பல்நோக்கு கடற்பாசி பூங்கா தமிழகத்தில் அமைக்கப்பட்டது. முன்னணி ஏற்றுமதி மையமாக மாறத் தேவையான அனைத்து அம்சங்களும், தமிழ்நாட்டில் உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொழில்துறையினர் தங்களின் தரமான தயாரிப்புகளை அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதியை பெருக்க வேண்டும். ஏற்றுமதி செய்யப்படும் பொருள், பிராண்டு பெயரை மட்டும் அல்லாது, தமிழகம் மற்றும் இந்தியாவின் புகழையும் கொண்டு செல்கிறது. அதனால் தரத்தில் சமரசம் கூடாது. சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்தான் புதிய மந்திரம். தற்சார்பு இந்தியாதான் தொலைநோக்கு. உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிப்பதுதான், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல் திட்டம். சுதேசி இயக்கத்தை வழிநடத்திய வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வழியை பின்பற்றி, பிரதமர் திரு நரேந்திர மோடி தற்சார்பு இந்தியா மற்றும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்தை, சுதந்திர இந்தியாவின் வைர விழாவில் அறிவித்தார். ஏற்றுமதிக்கு, புதிய துறைகள் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன. உள்ளூர் தயாரிப்பு பொருட்கள், ஜவுளிகள், பொம்மைகள் ஆகியவை உலக சந்தையில் இடம்பெற ஊக்குவிக்கப்படுகின்றன. ஒரு வார கால கொண்டாட்டம் மிகப் பெரிய வெற்றியடைந்ததில் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துகள். சுதந்திர இந்தியாவின் வைர விழாவை கொண்டாடுவதற்காக, வர்த்தக மற்றும் வணிக வாரம் நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை கொண்டாப்பட்டது. இவ்வாறு மத்திய இணையமைச்சர் டாக்டர். எல் முருகன் பேசினார். சென்னை தாம்பரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் மெப்ஸ்ல் நடந்த இந்த விழாவில் வெளிநாட்டு வர்த்தகத்துறை கூடுதல் தலைமை இயக்குனர் டாக்டர் எம்.கே. சண்முக சுந்தரம், இணை இயக்குனர் திருமதி எப்.டி.இனிதா மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.