ஐஐடி மெட்ராஸில் சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கையைத் தொடக்கம்
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பியாடில் சிறந்து விளங்குவோருக்கான இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. இவை பல்வேறு பாடங்கள் மற்றும் திறன்களின் அடிப்படையில் மாணவர்களை மதிப்பிடும் சவால்மிக்க போட்டித் தேர்வுகளாகும். ‘அறிவியல் ஒலிம்பியாடில் சிறந்து விளங்குவோர்’ என்ற இப்பிரிவிற்கு 2025-26 கல்வியாண்டு முதல் ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) கட்டமைப்புக்குள் வராமல் மாணவர் சேர்க்கை நடைபெறும். விளையாட்டுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை மற்றும் நுண்கலைகள் மற்றும் கலாச்சாரத்திற்கான சிறப்பு மாணவர் சேர்க்கை ஆகியவற்றைப் போன்று ‘அறிவியல் ஒலிம்பியாட் சிறப்பு’ (ScOpE) மாணவர் சேர்க்கையிலும் ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் மாணவிகளுக்கு பிரத்யேகமாக ஒரு இடம் உள்பட தலா 2 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும். 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வயது உள்ளிட்ட இதர தகுதி அளவுகோள்கள் அந்தந்த ஆண்டிற்கான ஜேஇஇ (அட்வான்ஸ்ட்)-க்கு இருப்பதைப் போன்றே இருக்கும். விண்ணப்பதாரர்கள் முந்தைய ஆண்டுகளில் எந்தவொரு ஐஐடி-யிலும் மாணவராக சேர்க்கப்பட்டிருக்கக் கூடாது. முதல் பேட்ச்-க்கான விண்ணப்ப பதிவு ஜூன் 3, 2025 முதல் தொடங்கும். அறிவியல் ஒலிம்பியாட் சிறப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டல்கள், அலுவல் விதிமுறைகள் பின்வரும் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன. - https://ugadmissions.iitm.ac.in/scope அறிவியல் ஒலிம்பியாட் சிறப்பு மாணவர் சேர்க்கைக்கான தொலைநோக்குப் பார்வை குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “உலகின் மிகப் பெரிய புதிர்கள் பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் தீர்க்கப்படுவதில்லை. மாறாக அவற்றை துண்டுதுண்டாகப் பிரித்து, எதிர்கால சந்ததியினருக்கு புதிய அதிசயங்களை உருவாக்கத் துணிபவர்களால்தான் தீர்க்கப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டத்தோடு, அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் பெரிதும் விரும்பும் இளநிலைப் படிப்புகளில் சேர்க்கையை வழங்குவதன் மூலம் ஐஐடி மெட்ராஸ் புதியதொரு பயணத்தைத் தொடங்குகிறது” எனக்குறிப்பிட்டார்.