தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.
தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான திரு ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும். செப்டம்பர் 1-ஆம் தேதி (புதன்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 3 (வெள்ளிக்கிழமை) ஆகும். தேர்தலின்போது ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: 1. தேர்தல் சம்பந்தமான பணிகளின் போது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 2. தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அரங்கம்/அறை/ வளாகத்தின் நுழைவாயிலில்: • உடல்வெப்ப நிலை பரிசோதிக்கும் கருவிகள் மூலம் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். • அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினிகள் இடம்பெற வேண்டும். 3. மாநில அரசு மற்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொவிட்-19 வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். 4. இந்தத் தேர்தல், கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரியை நியமிக்குமாறு தமிழகத்தின் தலைமைச் செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.