சுவாமி விவேகானந்தரின் தாக்கமும், ஈர்ப்பும் நமது தேசிய வாழ்க்கையில் அப்படியே உள்ளது : பிரதமர்.
இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நடந்தது. இந்த விழாவில் தேசியளவில் வெற்றி பெற்ற மூன்று இளம் வெற்றியாளர்களின் கருத்துக்களை பிரதமர் கேட்டார். மக்களவைத் தலைவர், மத்திய கல்வி அமைச்சர், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்த பிரதமர், காலம் கடந்தாலும் கூட சுவாமி விவேகானந்தரின் தாக்கமும், ஈர்ப்பும் நமது தேசிய வாழ்க்கையில் அப்படியே மாறாமல் உள்ளன என்றார். தேசிய வாதம் மற்றும் நாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அவரது கருத்துக்கள், மக்களுக்கும், உலகத்துக்கும் சேவை செய்வதில் அவர் ஆற்றிய போதனைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு பற்றி பிரதமர் பேசினார். தனிநபர்கள் சுவாமி விவேகானந்தரை தொடர்பு கொண்டனர் மற்றும் நிறுவனங்களை உருவாக்கினர். பதிலுக்கு, அவை புதிய நிறுவன மேம்பாட்டாளர்களை உருவாக்கியது. இந்த நடைமுறை, தனிநபர் வளர்ச்சி, நிறுவன மேம்பாட்டை ஏற்படுத்தும் நல்ல சுழற்சியைத் தொடங்கியது. தனிதொழில் முனைவோர் மற்றும் சிறந்த நிறுவனங்கள் இடையேயான தொடர்பை பிரதமர் எடுத்து கூறியதுபோல், இதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலம். அண்மையில் புதிய கல்வி கொள்கை வழங்கிய வசதி மற்றும் புத்தாக்க கற்றல் முறைகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். நாட்டில் நல்ல சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க நாம் முயற்சிக்கிறோம். இது இல்லாதததால்தான், இளைஞர்கள் வெளிநாடு செல்ல நேரிடுகிறது என பிரதமர் கூறினார். https://www.youtube.com/watch?v=BAmDbd0n0BQ நம்பிக்கையான, தெளிவான, அச்சமற்ற, தைரியமான இளைஞர்களை நாட்டின் அடித்தளமாக சுவாமி விவேகானந்தர்தான் அங்கீகரித்தார் என பிரதமர் வலியறுத்தி கூறினார். இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் கூறிய மந்திரங்களை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். உடல் தகுதிக்கு, இரும்பு தசைகளும், எஃகு நரம்புகளும் தேவை; ஆளுமை வளர்ச்சிக்கு தன்னம்பிக்கை தேவை; தலைமைப் பண்புக்கும், குழுப் பணிக்கும் அனைவரையும் நம்ப வேண்டும் என சுவாமி விவேகானந்தர் கூறினார். அரசியலில் இளைஞர்கள் தன்னலமற்ற மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்க வேண்டும் என பிரதமர் அறிவுரை கூறினார். நேர்மையற்ற செயல்பாடுகளின் தளம்தான் அரசியல் என்ற பழைய கருத்து மாறி, இன்று நேர்மையானவர்களுக்கும் பொது சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது என அவர் கூறினார். நேர்மையும், செயல்பாடும்தான் இன்றைய தேவை. வாரிசு அரசியலால் ஏற்படும் தீங்குகளையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். ஊழல் மக்களுக்கு சுமையாக மாறிவிட்டது என அவர் கூறினார். வாரிசு அரசியல் முறையை ஒழிக்க வேண்டும் என அவர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஜனநாயக அமைப்பில் வாரிசு அரசியல், திறமையின்மைக்கும், சர்வாதிகாரத்துக்கும் வழிவகுக்கிறது. இது போன்ற நபர்கள், குடும்ப அரசியல், அரசியலில் குடும்பம் என்ற நிலையை ஏற்படுத்துகின்றனர். ‘‘வம்சாவழி பெயர் மூலம் தேர்தலில் வெற்றி பெறும் காலம் எல்லாம் தற்போது முடிந்து விட்டது. வாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழியவில்லை.... வாரிசு அரசியல், நாட்டை முன்னேற்றாமல், தன்னையும் குடும்பத்தையும்தான் வளர்க்கிறது. இந்தியாவில் சமூக ஊழலுக்கு இதுதான் முக்கிய காரணம்’’ என பிரதமர் கூறினார். புஜ் நிலநடுக்கத்துக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளை உதாரணமாகக் கூறிய பிரதமர், பேரழிவில் தங்கள் சொந்த பாதையை உருவாக்க கற்றுக்கொள்ளும் சமூகம், தங்கள் விதியை எழுதுகிறது. அதனால்தான், 130 கோடி இந்தியர்களும் தங்கள் சொந்த விதியை இன்று எழுதுகின்றனர். இன்றைய இளைஞர்களின் ஒவ்வொரு முயற்சியும், புத்தாக்கமும், நேர்மையும் நமது நாட்டின் எதிர்காலத்துக்கு வலுவான அடித்தளம் அமைக்கிறது என பிரதமர் கூறினார்.