கொவிட்-19 தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ், இதுவரை 14 கோடிக்கும் அதிகமான தடுப்பூசியை செலுத்தி இந்தியா குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது. உலகளவில் மிக விரைவாக, வெறும் 99 நாட்களிலேயே இந்தியா இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது. இன்று காலை 7 மணி வரை, 20,19,263 முகாம்களில் 14,09,16,417 பயனாளிகளுக்கு, கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 25 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 99-வது நாளான நேற்று (ஏப்ரல் 24, 2021), நாடு முழுவதும் 25,36,612 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,40,85,110 ஆக (83.05%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,113 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,49,691 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, சத்திஸ்கர், மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 74.53 விழுக்காடு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67,160 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 37,944 பேரும், கர்நாடகாவில் 29,438 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 26,82,751 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 15.82 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.13 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: