2020-21-ஆம் ஆண்டுக்கான கரிப் சந்தைப்படுத்துதல் பருவத்தில், ஏற்கனவே இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டங்களின் படி கொள்முதல் முழுவீச்சில் நடக்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்திரகாண்ட், சண்டிகர், ஜம்மு & காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், கரிப் 2020-21 பருவத்துக்கான நெல் கொள்முதல் துரித கதியில் நடைபெற்று வருகிறது. 2020 அக்டோபர் 19 வரை, 8.54 லட்சம் விவசாயிகளிடம் இருந்து ஒரு மெட்ரிக் டன் நெல்லுக்கு ரூ 18,880 என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையில், 98.19 லட்சம் மெட்ரிக் டன்கள் நெல் ரூ 18,539.86 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. கரிப் சந்தைப்படுத்துதல் பருவம் 2019-20-இன் இதே காலகட்டத்தில் நெல் கொள்முதலின் அளவு 80.20 மெட்ரிக் டன்கள் ஆகும். எனவே, கடந்த பருவத்தை விட இந்த முறை 22.43 சதவீதம் அதிக நெல் கொள்முதல் செய்யப்படுள்ளது. மேலும் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று 42.46 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்திரப்பிரதேசம், ஒடிஷா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.