திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து அமைச்சர்கள்களின் செயல்கள் திமுக தலைமைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக பேசி வருகிறார்கள். இதை திமுக தலைவர் எவ்வாறு கையாள போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வானதி சீனிவாசனிடம் பேசியது, அறநிலைய துறை அமைச்சர்
சேகர் பாபு வட இந்தியர்களை குறித்து பேசியது,சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிகள், மேலும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துரு துருவென பத்ம சேஷாத்ரி பள்ளியை அரசு நிர்வகிக்கும் சொன்னது, அதற்கு சுப்ரமணிய சாமி பதிலடி கொடுத்தது உயர் கல்வி அமைச்சர் பொன்முடி பத்திரிக்கையாளர்கள் மூலம் தான் கொரோன பரவுகிறது என சொன்னது என தொடர் புகார்கள் திமுக தலைமைக்கு சென்றுள்ளது. தற்போது அமைச்சர் எம்.ஆர்.கே, பன்னீர்செல்வம்அந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி இது போன்ற விஷயங்களில் சாதுர்யமாக பதில் கொடுப்பார். ஸ்டாலின் அவர்கள் தனது அமைச்சர் சகாக்களுக்கு வாய் பூட்டு போடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தற்போது நடக்கும் செயல்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்கள் மூலம் மிக விரைவாக மக்களிடம் செல்கிறது. இதை புரிந்து கொண்டு திமுக அமைச்சர்கள் சற்று அடக்கி வாசிக்க வேண்டும் என திமுகவின் மூத்த ஆலோசகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அமைச்சர் எம்.ஆர்.கே, பன்னீர்செல்வம் பத்திரிக்கையாளர்களிடம் நடந்து கொண்ட விதம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன்.ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என ஒரு கோரிக்கை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னோட அமைச்சரோட செயலுக்காக, தார்மீகமாகப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கணும்:தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன்.
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே, பன்னீர்செல்வம், விவசாயிகளிடமும், வேளாண்மைத்துறை அலுவலர்களிடமும் மிகவும் கண்ணிய குறைவாக நடந்துகொள்வதாகத் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக, தஞ்சையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். ஆனால், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எந்த ஒரு கோரிக்கை தொடர்பாகவும் வாய் திறக்கவே இல்லை.
குறிப்பாக, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட தென்னை வணிக வளாகம், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, கடந்த பத்தாண்டுகளாக முடக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தி.மு.க தலைவர் ஸ்டாலின், அதை நேரடியாகப் பார்வையிட்டு, உடனடியாகத் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனாலும் மூடியே கிடக்கிறது.அதைத் திறக்க தற்போதைய தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி வீரசேனன் வலியுறுத்தினார்.
ஆனால், இக்கோரிக்கை குறித்து, அமைச்சர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
விவசாயிகள் சிலர் தங்களது முக்கிய பிரச்னைகளை இவரது கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக தொலைபேசியில் தொடர்புக்கொண்டபோது மிகவும் கர்வமாகப் பேசியதாக விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.
இந்நிலையில்தான் இன்று தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அப்போது செய்தியாளர் ஒருவர், “கடந்த ஆட்சியில் நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வாங்கப்பட்டது. அது இப்போது ஒழிக்கப்படுமா என்ற ரீதியில் கேள்வி எழுப்ப முயன்றார்.
அதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மிகவும் கன்ணியக் குறைவாக, “நீ இப்படி கிறுக்குத்தனமாகக் கேள்வி கேட்டால், நானும் கிறுக்குத்தனமாகத்தான் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்” என்றார். இது பத்திரிகையாளர்களையும் விவசாயிகளையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “அமைச்சரின் பேச்சு கடும் கண்டனத்துக்கு உரியது. பத்திரிகையாளர்களை மட்டும் அல்ல… விவசாயிகளையும் சேர்த்துதான் அவமானப்படுத்தியிருக்கிறார்.
நெல் கொள்முதல்ல நடக்கும் லஞ்ச ஊழலைப் பத்தி பேசினால் இவருக்கு ஏன் இப்படி கோபம் வருது..? அதுவும் கடந்த ஆட்சியில் நடந்ததைப் பேசினதுக்கு இவர் ஏன் கோபப்படணும்..? அப்படினா, கடந்த ஆட்சியில் நெல் கொள்முதல்ல லஞ்சமே வாங்கலைனு அமைச்சர் சொல்ல வர்றாரா. இல்லை… நெல் கொள்முதலுக்கு லஞ்சம் வாங்குறது தவறு இல்லைனு சொல்ல வர்றாரா.?
அமைச்சர் நடந்துகொண்ட விதம், மக்களாட்சி தத்துவத்துக்கு விரோதமானது. இந்த நாட்டோட எந்த ஒரு குடிமகனும் ஆட்சியாளர்களைக் கேள்விக் கேட்க உரிமை உண்டு. அதுவும் பத்திரிகையாளர்களுக்கு இந்த உரிமை, காலம் காலமாக உறுதி செய்யப்பட்ட்டிருக்கு. அமைச்சர் தன்னோட கண்ணியக் குறைவான செயலுக்கு, பொதுவெளியில் கண்டிப்பாக வருத்தம் தெரிவிச்சே ஆகணும்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னோட அமைச்சரோட செயலுக்காக, தார்மீகமாகப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கணும். அமைச்சரின் இந்தச் செயலுக்கு உடனடியாக, இவர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.