நடப்பாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். . தமிழக பட்ஜெட் குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் வானதி சீனிவாசன் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
சட்டமன்றத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறுகையில்:
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தடையின்றி படித்தாரே தவிர, சொல்லிக் கொள்ளும் வகையில் அறிக்கையில் எதுவும் இல்லை என அவர் குற்றம்சாட்டினார். மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டம், தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது இதுபோல் பலத்திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டும் பட்ஜெட்டாக உள்ளது. மேலும் அடையாறு கால்வாயை தூர்வாரும் பணி, கலைஞர் கருணாநிதியின் காலத்தில் இருந்து பேசப்பட்டு வருகிறது. தற்போது வரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த பட்ஜெட்டில் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை, ஒவ்வொரு முறையும் அரசு வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுகிறது. வருவாயை பெருக்க முடியாமல் மத்திய அரசின் மீது பழிபோடும் அறிக்கையாக பட்ஜெட்டாக உள்ளது. மாநிலத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு நிதி வழங்கும், தமிழகத்தில் கடன் அதிகம் உள்ளது. இதன் காரணமாக பற்றாக்குறை பட்ஜெட் போடும் சூழல் உள்ளது.
மேலும், கோவையில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் டைடல் பார்க்கை, ஏதோ புதிதாக பேசுவது போல் மாநில அரசு அறிவித்துள்ளது.என கூறினார்.