நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பிகார் மற்றும் கேரளாவில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இங்கு டிசம்பர் 11 வரை 372.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலத்தில் 308.57 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.
கடந்தாண்டைவிட இந்தாண்டு நெல் கொள்முதல் 20.68 சதவீதம் அதிகம். இந்தாண்டில் இது வரையிலான மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 202.77 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு காரீப் சந்தை காலத்தில் 40.53 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 70311.78 கோடி பெற்றுள்ளனர்.
மேலும், மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 48.11 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்தால், மற்ற மாநிலங்களில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, வேண்டுகோள் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















