மே 1 உலகம் முழுவதும் தொழிலாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.. தொழிலாளர்களின் உழைப்பே உலக இயக்கத்திற்கு காரணம் என்று உலகின் தலைசிறந்த தலைவர்கள் கார்ல் மார்க்ஸ்,லெனின் போன்றோர் சொல்லி அதை செயல் வடிவமாக்கி, உழைப்பாளர்களின் உரிமைகளை பெற்று தந்த நாள்.... இந்த நாளில் தமிழகத்தில் முதன் முதலாக தொழிலாளர்களை ஒன்று திரட்டிய தமிழன் நம் வஉசி அவர்கள்..அவர் செயல்களை இந்த பதிவில் காணலாம்...
உலகநாதருக்கும்,பரமாயி அம்மாளுக்கும் 1872,செப்டம்பர் 5 ம் நாள் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார்.வசதியான குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் வறுமையில் வாடிய மக்களை வளமாக்க எண்ணினார்..நன்கு படித்து ஏழைகளுக்காக மட்டும் வாதம் செய்யும் வழக்குரைஞர் ஆனார்..
1.தமிழகத்தின் தொழிலாளர்களின் முதல் தலைவன்..
2.தூத்துக்குடியில் தேச நலன் காக்க மக்களை ஒன்று திரட்ட சுதேசி பண்டகசாலை,தரும நெசவு சங்கசாலை,ஜனசங்கம் என்ற மூன்று அமைப்புகளை நிறுவினார்..
3.கப்பல் வாணிகத்தில் வெள்ளையர்களின் ஆதிக்கத்தை உடைக்க 1906 அக்டோபர் 16ல் ‘ சுதேசி ஸ்டீம் நேசிகேஷன்’ உருவாக்கினார்..
4.அவர் கப்பல் வாங்க மும்பை சென்றிந்தபோது ,இங்கு வ உசி மகன் மரணமடைந்தார்…அந்த செய்தி கேட்ட அவர் ” நான் வந்தால் கப்பலோடு வருவேன்,இல்லையெனில் கடலில் விழுந்து மாய்வேன்” என்று முழங்கினார்..
5.கோரல் மில்லை எதிர்த்து போராட்டம்.
அந்த மில்லில் 1,800 தொழிலாளர்கள் வேலை செய்தனர்..காலை 6 மணி முதல் மாலை6 மணி வரை வேலை..தவறு செய்தால் பிரம்பால் அடி.. விடுமுறை இல்லை.மிகக்குறைந்த ஊதியம்,உழைப்பு சுரண்டல்…இதற்கு முடிவு கட்ட களம் கண்டார் வ உ சி…ஆம்..அத்தனை தொழிலாளர்களையும் வேலை நிறுத்த போராட்டத்தில் இறக்கினார்…”வந்தே மாதரம்” என முழங்கி தூத்துக்குடி வீதிகள் முழுவதும் சென்றனர் தொழிலாளர்கள்..இந்த போராட்டம் வெற்றி பெற்றது..தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது… வ உ சி யின் இந்த செயலை வங்கத்தில் அரவிந்த கோஷ் "வந்தே மாதரம்" இதழில் பாராட்டினார்..இன்று தூத்துக்குடி போர்க்கள காட்சிகள் விளக்குவது என்னவென்றால், 'தீவிரமான வீரப்பண்பும்,உயிர்த்தியாகமும் தெற்கு நோக்கி பயணித்தன'என்று நெஞ்சம் நெகிழ்ந்து எழுதினார்.. 6. அனைத்து தரப்பு தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து ஒற்றுமையை உலகிற்கு உதாரணமாய் காட்டியவர் நம் வ உ சிதம்பரம் அவர்கள்.. தொடர் ஆங்கிலேய அரசை எதிர்த்து செயல்பட்டதாலும்,தொழிலாளர்களை ஒன்று திரட்டியதாலும் ஒரு கட்டத்தில் வ உ சி கைது செய்யப்பட்டார்..இந்த செய்தி கேட்டதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.இந்திய வரலாற்றில் உழைக்கும் வர்க்கம் அரசியல் நோக்கத்திற்காக முதன் முதலில் வ உ சி கைது செய்யப்பட்ட போதுதான் வேலைநிறுத்ததை நடத்தியது..
இந்த நல்ல நாளில் தமிழகத்தில் இப்படி பெரும் செயலை முதன் முதலில் செய்த வ உ சி அவர்களை நாம் நினைவு கூறுவோம்..தமிழர்களின் வரலாறு அடுத்த தலைமுறைக்கு சரியாக நாம் கொண்டு சேர்க்க வேண்டும்..
தனது மரண தருவாயில் கூட தீவிர சைவ சமயம் தழுவிய இவர் தேவாரம்,திருவாசகம் கேட்கவில்லை..பாரதியின் பாடல்களை கேட்டுக்கொன்டே உயிர் துறந்தார்..
தமிழர்களால் போற்றப்படாத தலைவர்கள் பலர் உள்ளனர்..
வ உ சிதம்பரம் போன்ற தலைவர்களை போற்றாவிட்டாலும் பரவாயில்லை..வாழ்வு போகின்ற போக்கில் மறந்து விடக்கூடாது..
செக்கிழுத்த செம்மல்,வசதிகளை விட்டு மக்களின் வசதிக்காக வாழ்ந்த மாமேதை,நன்றி மறவா நாயகன்,நம் முன்னோடி வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் அவர்களை இந்த மே 1 ம் தினத்தில் உங்களோடு சேர்ந்து நினைவு கூர்தல் பெரும் மகிழ்ச்சி..
தமிழனால் மறக்க முடியா உழைப்பாளர்களின் உன்னதமான தலைவர் வ உ சி….
✍ கட்டுரை :- அருணகிரி சிதம்பரநாதன்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















