ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எஸ். ஆர். தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:-
கடந்த பத்தாண்டுகளாக தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் நிலவும் சூழ்நிலை, வருவாய், தரம், மக்களின் வாழ்நிலை, மொழி அடிப்படையில் இழைக்கப்படும் அநீதி, கேரள மாநில அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை என பல்வேறு காரணிகளை பிரிவினைக்காக நாம் முன்வைக்கின்றோம்.மாநிலங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படுவது என்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல. மேலாக கேரள மாநிலத்தில் உள்ள பதினான்கு மாவட்டங்களில், தமிழர்கள் நிறைந்த பாலக்காடு மாவட்டத்தில் எழாத குரல், இன்றைக்கு தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் எழுந்திருக்கிறது.
இன்னொரு தேசத்தில் இருந்து பிழைப்பிற்காக டார்ஜிலிங் வந்து, கரடுமுரடாக கிடந்த அந்த மலைகளை செப்பனிட்ட மக்களுக்கு,கூர்க்கா லேண்ட் என்ற அந்தஸ்தோடு, தன்னாட்சி கவுன்சில் அந்தஸ்தை வழங்கி இருக்கிறது மத்திய அரசு.டார்ஜிலிங்கில் பிரதானமானது தேயிலைதான், தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் பிரதானமானதும் தேயிலைதான்.
மேலாக டார்ஜிலிங்கில் பெருவாரியாக வாழும் கூர்க்காக்கள் பேசக்கூடிய மொழி நேபாளி. தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் பெருவாரியாக வாழும் மக்கள் பேசக்கூடிய மொழி தமிழ்.மேலாக டார்ஜிலிங்கை தங்களுக்கு கோருவதற்கு எந்த நியாயமும் அற்றவர்களாக இருந்த கூர்க்காக்களுக்கே அது சாத்தியமாகி இருக்கிறதென்றால், 1956 மொழிவழி பிரிவினைக்கு முன்பு வரை தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ளடங்கி இருந்த தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து கோருவதற்கு தமிழர்களுக்கு நிறையவே நியாயம் இருக்கிறது.
அந்த நியாயத்தின் அடிப்படையில் தான், இன்றைக்கு இந்த கோரிக்கையை இடுக்கி மலையகத்தில் காலங்காலமாக தங்கள் உரிமைகளை இழந்த தமிழர்கள் எழுப்பியிருக்கிறார்கள்.மனச்சாட்சி உள்ள மலையாளிகள், மனித உரிமை பேசும் மக்கள் செயற்பாட்டாளர்கள், வர்க்க உரிமையில் தொழிலாளிகளின் பக்கம் வலுவாக நிற்கும் இடதுசாரி சிந்தனையாளர்கள், மேலாக தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் காலங்காலமாக தமிழர்கள் நசுக்கப்பட்டு வருவதை கண்ணுற்று வரும் நல்ல மனம் படைத்த அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் இந்த கோரிக்கையின் பக்கம் நிற்பதே நியாயமாக இருக்கும்.
1870 களில் ஆரம்பித்த தமிழர்களின் மலையகம் நோக்கிய பயணம், கடும் உழைப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதை மறந்து விடக்கூடாது. அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர நாட்டிலிருந்து வந்த தெலுங்கு சகோதரர்கள் இன்றைக்கு தமிழகத்தில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும்.
140 ஆண்டுகால உழைப்பின் பயனாக தமிழர்கள், தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் பெற்றது எதுவும் இல்லை என்கிறது வரலாறு.சராசரியாக தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் வாழும் ஐந்து இலட்சம் தமிழர்களில், 97 விழுக்காடு தமிழர்கள், இன்றைக்கும் நிலமற்றவர்களே.பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை நகருக்கு பிழைக்க வந்த ஒரு மலையாள சகோதரனின் வாழ்க்கையை, ஒப்பீட்டளவில் கூட தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் 140 ஆண்டு காலமாக வாழும் தமிழர்களுடன் நாம் பொருத்திப் பார்த்து விட முடியாது.
பெயரளவில் ஒரு வாழ்க்கை என்பது மட்டுமே அவர்களுக்கு சாத்தியமாகியிருக்கிறது. கொண்டாடுவதற்கோ, பீற்றிக் கொள்வதற்கோ அதில் எதுவுமில்லை.உலகத்திலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிச ஆட்சியாளர்கள் முதன்முதலில் பதவி ஏற்றுக்கொண்ட மண்ணில், இன்றுவரை ஏதோ ஒரு மூலையில், முதலாளி தொழிலாளி எனும் அடிமைத்தனம் நீடிக்கிறதென்றால், பேராசான் மார்க்ஸ் கூட அதை மன்னிக்க மாட்டார்.
குல ரீதியாக ஒடுக்கப்பட்டு கிடந்த ஈழவ மக்களுக்கு ஒரு நாராயணகுரு கிடைத்ததைப் போல, இன ரீதியாக துவேசத்தின் விழிம்பில் அடக்கி ஒடுக்கப்பட்ட புலையர்களுக்கு ஒரு அய்யங்காளி கிடைத்தது போல, நாற்பதாண்டுகளாக இடுக்கி மலையகத்தில் துவண்டு சரிந்து கிடக்கும் தமிழ் மக்களுக்கு ஒரு தலைவன் கிடைக்கவில்லையே என்பதுதான் என்னுடைய உச்சக்கட்ட ஆதங்கம்.
சிறு பொறி பெரு நெருப்பாவது போல, பெட்டிமுடி எனும் சிறு நெருப்பு, யூனியன் பிரதேசமெனும் பெரு நெருப்பாக மாறும் காலம் வந்து கொண்டிருக்கிறது.பீர்மேடு தாலுகாவில் எருமேலிக்கு செல்லும் வழியிலிருக்கும்
குட்டிக்கானத்தில் ஆரம்பிக்கும் எங்களுடைய பழைய மலை, திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அமராவதி அணை வரை நீள்கிறது.
தேவிகுளம் தாலுகாவில் மாங்குளத்தில் ஆரம்பிக்கும் எங்களுடைய பழைய மலை, உத்தமபாளையம் தாலுகாவிலுள்ள குமுளி வரை நீள்கிறது.எங்களுடைய பாண்டிய மரபைச் சேர்ந்த பூஞ்சார் சமஸ்தானத்தின் தொடக்கப் புள்ளியாக அறியப்படும் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஈராட்டுப்பேட்டையிலிருந்து எங்களால் ஆரம்பிக்க முடியும். வரலாற்றை துணைக்கழைத்து நாங்கள் வம்பு செய்ய விரும்பவில்லை. அதனால் கடந்து செல்கிறோம்.
வரலாறு தங்களுடைய தாய் மண்ணான பெல்காமை, கன்னடர்களிடமிருந்து விடுவித்து தங்களுக்கு தரும் என்ற நம்பிக்கையில் இன்னமும் காத்திருக்கும் மராட்டியர்களைப் போல நாங்கள் காத்திருக்க தயாரில்லை.எங்களுக்கு தேவை தேவிகுளம் பீர்மேடு விடுதலை.1956 ஆம் ஆண்டு தமிழ் மண்ணின் மீது நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரத்தின் இன்னொரு வடிவமான, மொழிவழிப் பிரிவினை எனும் மோசடியில், துண்டாடி துவேஷம் செய்யப்பட்ட எங்கள் நிலத்தை நாங்கள் கோருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. அதை மறுப்பதற்கு ஒரு காரணமாவது முதல்வர் பினராயி விஜயனிடம் இருக்கிறதா?
நினைத்த மாத்திரத்தில் தேவிகுளம் பீர்மேட்டை தங்களுக்கு பட்டா போட்டுக் கொள்வதற்கு அது என்ன அனாமத்துச் சொத்தா?வன வளமும், நீர் வளமும், நில வளமும் பொருந்திய தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்கள் முற்றிலும் தமிழ் நிலத்திற்கு சொந்தமானது என்பதற்கு ஆயிரம் சான்றுகள் இருக்கிறது?
அதை மறுத்து ஒரு சான்றை காண்பிக்க முடியுமா பினராயி விஜயன் அவர்களே?வலிமையுள்ளவையே வாழும் survival of the fittest என்று சொல்லப்பட்ட வார்த்தையை, வரலாறு கைக்கொள்ளுமானால், இந்த உலகத்தில் அமெரிக்கா ரஷ்யா சீனா என்று மூன்று நாடுகள்தான் இருந்திருக்க முடியும் இன்றைக்கு.
வண்டிப்பெரியாறில் எங்கள் தோழன் பாலு படுகொலை செய்யப்பட்ட போதே, அனல் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால் பெட்டிமுடியில்தான் பிரளயம் வெடிக்க வேண்டும் என்று காலம் தீர்மானித்திருக்கிறது போலும்.துள்ளத் துடிக்க ஒவ்வொரு உயிரும் மண்ணுக்குள் புதையுண்டு வாரம் ஒன்று ஆனபின்தான், வருகை தருகிறார் மாநில முதல்வர் பினராயி விஜயன் என்றால், அவரிடமிருந்தா நாங்கள் நீதியை எதிர்பார்த்துவிட முடியும்?
எங்கே பீர்மேட்டின் சட்டமன்ற உறுப்பினராக வந்து விடுவானோ இந்த வண்டிப் பெரியாறு பாலு என்ற பயத்தில்,அருவாளையும், கோடாரியையும் தூக்கிக்கொடுத்து, அவனை படுகொலை செய்யச் சொன்ன தோழர் எம்.எம். மணியை, மந்திரி மணியாக அருகே அமர்த்தி வைத்துக்கொண்டு, எப்படி தோழர் பினராயி அவர்களே எங்களுக்கு உங்களால் நீதி வழங்க முடியும்?
எனவே புதுச்சேரியை விட மூன்று மடங்கு பெரிய, கூர்க்காலேண்டை விட ஒரு மடங்கு பெரிய, தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களை இணைத்து, மத்திய ஆட்சிப் பகுதி அந்தஸ்து அல்லது தன்னாட்சி கவுன்சில் அந்தஸ்து என இரண்டில் எது பொருந்துகிறதோ, அதை அமல்படுத்த வேண்டும் என்கிற வரலாற்றுக் கோரிக்கை ஒன்றை என் தமிழ் சமூகத்தின் சார்பாக முன் வைக்கிறேன்?
கல்வி மறுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட, வாழ்நிலை மறுக்கப்பட்ட…
தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களுக்களில் வாழும் அப்பாவி தோட்டத் தமிழ் தொழிலாளிகளுக்கு, மறுக்கப்பட்ட அத்தனையையும் கிடைப்பதற்கு களத்தில் இறங்குவோம்.பெட்டிமுடி நம்மை இணைக்கும் பேராயுதம்.உலகத்தமிழர்கள் என்னால் முன்னெடுக்கப்படும் இந்த சிறு கோரிக்கைக்கு உயிர் கொடுப்பார்கள் என்ற அசையாத நம்பிக்கை யோடு மீண்டும் மீண்டும் உங்களை சந்திப்பேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்