மழைக்காலத்துக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலைகளை நல்ல நிலையில் வைத்திருக்கத் தயாராகும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

வரவிருக்கும் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளைப் பழுதில்லாமலும், போக்குவரத்துக்கு உகந்த வகையிலும் வைத்திருக்க, தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்புப் பணிகளை செய்யுமாறு அதன் மண்டல அதிகாரிகளையும், திட்ட இயக்குநர்களையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மழைக்காலத்துக்கு முன்னதாக, அதாவது 30 ஜூன், 2020க்குள், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து நெடுஞ்சாலைகளை  போக்குவரத்துக்கு உகந்த வகையில் வைப்பதே இதன் நோக்கமாகும்.

தனது மண்டல அதிகாரிகளுக்கும், திட்ட இயக்குநர்களுக்கும் திட்டமிடுதலிலும், செயல்களை முன்னுரிமைப் படுத்துவதிலும் உதவி, எதிர்ப்பார்த்த வகையில் நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியைத் துரிதப்படுத்த ஏதுவாக புதிய கொள்கை வழிகாட்டுதல்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. 

தேவைப்படும் நடவடிக்கைகளின் சிறப்பான திட்டமிடல் மற்றும் குறித்த நேரத்தில் அவற்றின் செயலாக்கம் ஆகியவற்றை உறுதி செய்வதே இலக்காகும்.

பராமரிப்புப் பணிகள் தொடர்பாக துரிதமாக முடிவுகளை எடுக்க ஏதுவாக, போதுமான நிதி அதிகாரமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

காரின் மீது பொருத்தப்பட்டுள்ள புகைப்படக் கருவி/ஆளில்லா சிறிய விமானம்/பாதைகளை ஆய்வு செய்யும் வாகனம் ஆகிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் துணையோடு பல்வேறு நெடுஞ்சாலை இடர்பாடுகளைக் (அழுத்தம், தேய்மானம் மற்றும் விரிசல் போன்றவை) கண்டறிந்து அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு திட்ட இயக்குநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version