: ”இலங்கையிடம் இருந்து பா.ஜ., அரசு நிச்சயம் கச்சத்தீவை மீட்கும்,” என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஆண்டுதோறும் ஜூன் 21ல் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் பா.ஜ., சார்பில், 10 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி நடக்கிறது.செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரத்தில் நடக்கும் யோகா பயிற்சியில், மத்திய சமூக நீதி அமலாக்க துறை இணை அமைச்சர் நாராயணசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கன்னியாகுமரியில் நடக்கும் பயிற்சியில், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி பங்கேற்கிறார். தேசத்தின் பாதுகாப்பிற்காகவும், இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், ‘அக்னிபத்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், தேர்வான வீரர்களிடம் நான்கு ஆண்டுகளுக்கு பின் கருத்து கேட்டு, குறைகள் இருந்தால், எதிர் கட்சிகள் பார்லிமென்டில் பேசலாம்.அதை செய்யாமல், இளைஞர்களை போராட்டத்திற்கு துாண்டி விட்டு, தேச பாதுகாப்பில் அரசியல் சாயம் பூசுவது நல்லதல்ல.
‘போராட உரிமை இருக்கிறது’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியிருப்பது, சின்ன பிள்ளை தனம்.கச்சத்தீவை மீட்பதற்காகவே, அங்குள்ள பிரச்னைகளை அறிந்து கொள்ள, மத்திய அரசால் அண்ணாலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கச்சத்தீவை பா.ஜ., நிச்சயம் மீட்கும். அதற்கு அண்ணாமலை காரணமாக இருப்பார். இவ்வாறு வி.பி.துரைசாமி கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















