குடியுரிமை சட்டம் தொடர்பாக திமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது , இதை பற்றி சிறப்பு வெளியிட்டுள்ள தினமலர் திமுகவை கிழித்து தொங்கவிட்டுள்ளது. தினமலரில் வந்துள்ள செய்தி தொகுப்பு.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தலைமை ஏற்று நடத்திய தி.மு.க., நிர்வாகிகள் பலருக்கும், அந்த சட்டத்தின் அடிப்படை கூட தெரிந்திருக்கவில்லை என்ற கண்டுபிடிப்பு, நாம் நடத்திய ஆராய்ச்சி’யில் அம்பலம் ஆகியுள்ளது.தி.மு.க., நிர்வாகிகளிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு, அவர்கள் அளித்த பதில்களும் ‘உள்ளது உள்ளபடி’ இங்கே வெளியிடப்படுகிறது. கேள்விக்கான பதில்கள் சரிதானா என, அதற்குரிய வரிசை எண்ணைக்கொண்டு, வலது பக்க கட்டத்தில் தரப்பட்டுள்ள, பதில்களுடன் பொருத்திப்பார்த்து, வாசகர்களே ‘மார்க்’ போட்டுக்கொள்ளலாம்.
திமுக நிர்வாகிகளிடம் கேட்கப்பட்ட கேள்விகள் ( உடன் தரப்பட்டிருக்கும் சரியான பதிவுகள், வாசகர்களின் தகவல்களுக்காக..)
- CAA என்பதன் ஆங்கில விரிவாக்கம் என்ன?
Citizenship Amendment Act – குடியுரிமை திருத்தச் சட்டம்.
- CAA -எத்தனை முறை திருத்தப்பட்டிருக்கிறது?
இந்த சட்டம் முதல் முறையாக, ராஜிவ் பிரதமராக இருந்த காலத்தில், 1985ல் திருத்தப்பட்டது. 1992ல் இரண்டாம் முறையாகவும், 2003ல் மூன்றாம் முறையாகவும், 2005ல் நான்காம் முறையாகவும், 2015ல் ஐந்தாம் முறையாகவும் திருத்தப்பட்டுள்ளது. இப்போது மோடி தலைமையிலான பா.ஜ., அரசால் திருத்தப்பட்டது, ஆறாம் முறை. (இதில் தெரிய வருவது யாதெனில், அரசு நினைத்தால் பார்லிமென்ட்டில் மெஜாரிட்டி இருந்தால், எத்தனை முறை வேண்டுமானாலும், யாருக்காக வேண்டுமானாலும், இச்சட்டத்தை திருத்த முடியும்.)
- புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள CAA எந்தெந்த நாடுகளுக்கு பொருந்தும்?
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான்.
- புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள CAA எந்தெந்த மதத்தினருக்கு பொருந்தும்?
ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்ஸிக்கள், கிறிஸ்தவர்கள். (மேலே உள்ள மூன்று நாடுகளில், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 6 மதத்தினர்தான் சிறுபான்மையினர் என்பதால், அந்த 6 மதத்தினர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.)
- கடந்த, 2014, டிச., 31 வரை எந்தெந்த நாடுகளில் இருந்து, எவ்வளவு பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர்?
இந்தியாவில் வசிக்கும் நாடற்ற அகதிகளின் எண்ணிக்கை, 2,89,394 ஆகும். இது பார்லியில் மத்திய அரசு தெரிவித்த தகவல். இவர்களில் வங்கதேசத்தவர் மட்டும், 1,03,817 பேர். இலங்கை தமிழர்கள் 1,02,467 பேர். திபெத்தியர்கள் 58,165 பேர். பர்மா நாட்டவர், 12,434. இது, பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை. பதிவு செய்யப்படாமல், சட்ட விரோதமாக இருப்பவர்களின் எண்ணிக்கை, அதிகமாக இருக்கும் என்பது, பாதுகாப்பு ஏஜன்சியினரின் கணிப்பு. பர்மாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ரோகின்ஹியா இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மட்டும், 40,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- 1947ல், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாகவும், இந்தியா மதசார்பற்ற நாடாகவும் அறிவிக்கப்பட்டதை அறிவீர்களா?
ஆம்.
- இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது. அப்போது, அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என, மகாத்மா காந்தி கூறியிருந்ததை அறிவீர்களா?
தெரியும்.
- வெளிநாட்டினர் இந்தியாவில், அதிகாரப்பூர்வ அனுமதியுடன், 11 ஆண்டுகள் தங்கியிருப்பின், இந்திய குடியுரிமை வழங்கலாம் என்ற அடிப்படையில், காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோருக்கு, வழங்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா?(வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன், அங்கு மதத்தின் பெயரால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, புத்தகம் எழுதினார். பயங்கரவாதிகளின் கொலை மிரட்டலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சமடைந்து, குடியுரிமை கோரி விண்ணப்பித்தார். இவருக்கு, மத்திய அரசு, இந்திய குடியுரிமை வழங்கியது. தஸ்லிமா நஸ் ரீன், ஓர் இஸ்லாமியர் என்பதால், குடியுரிமை மறுக்கப்படவில்லை. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்திய குடியுரிமை திருத்தச் சட்டமானது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில், சிறுபான்மையினர் என்பதால் துன்புறுத்தலுக்குள்ளாகி, சட்டப்படியாக இந்தியாவிற்குள் தஞ்சம் புகுவோருக்கு, குடியுரிமை வழங்கிட வழிவகை செய்கிறது. மேற்கண்ட மூன்று நாடுகளிலும் வசிக்கும் இஸ்லாமியர்கள், ‘சிறுபான்மையினர் அல்ல’ என்பதையும் கவனிக்க வேண்டும்.)
தெரியும்.
‘பொங்கலுார்’ பழனிசாமி, தி.மு.க., முன்னாள் அமைச்சர்:
- சி.ஏ.ஏ., என்பது சிட்டிசன்சிப் அமென்ட்மென்ட் ஆக்ட். இதை ஒரு தலைபட்சமாக செய்துள்ளனர். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்கள். ஒரு லட்சம் பேர் இங்கு இருக்கின்றனர். அவர்கள் அகதிகள் கூட கிடையாது. ஒரு காலத்தில் இங்கிருந்து அங்கு சென்று தோட்ட வேலை செய்தவர்கள். அப்படி திரும்பி வந்த அவர்களுக்கு இந்த சட்டத்தில் வாய்ப்பு தரப்படவில்லை.
- முஸ்லிம்களை தவிர்த்து மற்ற அனைத்து மதங்களையும் சேர்த்துள்ளனர்.
- வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று கூறியுள்ளனர்.
- உலகிலேயே அதிக முஸ்லிம்கள் இருக்கும் நாடு, இந்தியா. 25 கோடி பேர் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.
- ‘முஸ்லிம்களை தவிர்த்து மற்ற மதத்தினர் எல்லாம் வரலாம்’ என்று இந்த சட்டம் சொல்வதால், முஸ்லிம்கள் போராடுகின்றனர். இப்படி ஒரு தலைப்பட்சமாக இருப்பதால்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
- இன்று மைனாரிட்டி என்று சொல்லப்படுகிற முஸ்லிம்களிடம்தான், பாபர் காலம் முதல் பகதுார் ஷா காலம் வரை அடிமைகளாக இருந்தோம்.
- சத்தியசோதனை எல்லாம் படித்திருக்கிறேன். காந்தி, நேரு சொன்னது எல்லாம் அந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் சரியாக இருந்திருக்கும். காந்தி எந்த நாளில், எதற்காக சொன்னார் என்ன விவரம் என்று சொல்லாமல், அவர் சொன்னது பற்றி நான் கருத்து சொல்ல முடியுமா? காந்தி, கட்சியை கூட கலைக்கச் சொன்னார். நாட்டுப்பிரிவினை கூடாது என்றும் சொன்னார். அவர் இல்லையெனில் நாட்டை ஒற்றுமைப்படுத்த ஆளில்லை. அதையெல்லாம் படித்திருக்கிறோம். அவர் பெரிய மகான். அவர் கூறியது பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு நான் பெரிய மனிதன் அல்ல.
- சி.ஏ.ஏ., பற்றி நான் கருத்து சொல்லலாம். மற்றபடி, சோனியா காந்தி பற்றியெல்லாம் நான் சொல்லக்கூடாது. அதையெல்லாம் தலைமை தான் சொல்ல வேண்டும்.
இரண்டு முறை:
மத்தின், தி.மு.க., உடுமலை நகர செயலாளர்:
- குடியுரிமை திருத்தச் சட்டம்; இந்த சட்டத்துல நிறைய பிரச்னைகள் இருக்கு. ஆங்கிலத்துல கரெக்டா உடனே சொல்ல வரவில்லை.
- இரண்டு முறை.
- பாகிஸ்தான், பங்களாதேஷ்; ஆப்கானிஸ்தானுக்கு பொருந்தாது.
- இந்து உட்பட பல மதங்களுக்கு பொருந்தும்.
- 13 முதல் 15 லட்சம் பேர் இருக்கும்.
- தெரியும்; முகமது அலி ஜின்னா சிறுபான்மையினருக்கு, உரிய ஒதுக்கீடு பெறவே விரும்பினார்; அதற்கான சூழ்நிலைகள் இல்லாததால், தனிநாடு கோரிக்கை விடுத்தார் என படித்துள்ளேன்.
- சரியாக தெரியாது.
- தெரியும்; இந்திரா காந்தி மருமகளானதும் சோனியா இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
நான்கு முறை:
ஆசாத், தி.மு.க., உடுமலை நகர அவைத்தலைவர்:
- குடியுரிமை திருத்தச் சட்டம்; இங்கிலீஸ்ல கரெக்டா தெரியாது.
- நான்கு முறை.
- பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் சில முஸ்லிம் நாடுகள்.
- இந்துக்கள் உட்பட பெரும்பான்மை மதங்களுக்கு பொருந்தும்; முஸ்லிம்களுக்கு பொருந்தாது.
- 20 லட்சம் பேர் இருப்பார்கள்; கணக்கில் இல்லாதவர்களும் பல லட்சம் இருக்கும்.
- தெரியும்.
- அப்ப நாட்டுல ஏகப்பட்ட குழப்பம் இருந்துச்சு; அத்வானி பிறந்த பகுதியே பாகிஸ்தான் கூட சேர்த்திட்டாங்க. நிறைய பேர் பிரிவினைக்கு பிறகு இந்தியாவில் வந்து குடியிருக்கிறார்கள்.
- தெரியும்.
ஐந்தாறு நாடுகளுக்கு…
பாண்டியராஜ், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர், கூடலுார், நீலகிரி
- குடியுரிமை சட்டம் தானே…!
- 1955ல் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இதனை சரி செய்து வருகின்றனர்.
- ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்தாறு நாடுகளுக்கு பொருந்தும்.
- ஹிந்துக்கள், புத்த மதம், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட ஆறு மதங்கள்.
- பர்மாவிலிருந்து ரோகின்ஹியா முஸ்லிம்கள் அதிகம் குடியேறியுள்ளனர். அசாம் மக்கள் போராடும் வகையில், வேறு நாட்டின் மக்கள் குடியேற்றம் இருந்ததால் அசாமில் மட்டும், குடியேற்ற சட்டத்தை சரி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எத்தனை பேர் என்பது தெரியாது.
- தெரியும்
- நாட்டில் இருக்க கூடிய சிறுபான்மை மக்களை பாதுகாப்பது அந்தந்த அரசுக்கு உள்ளது, என்பது ஒவ்வொரு நாட்டின் சட்டம். மகாத்மா கூறியது பற்றி தெரியவில்லை.
- தெரியும்.
படித்துதான் கூற முடியும்:
திராவிடமணி, தி.மு.க., எம்.எல்.ஏ., கூடலுார், நீலகிரி
- ‘சிட்டிசன்ஷிப் அமென்மென்ட் ஆக்ட்’-2020
- இதுவரை இரண்டாவது முறை.
- பாகிஸ்தான், இலங்கை தவிர பிற அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
- இந்து, வங்கதேசம் மற்றும் முஸ்லிம், இலங்கை தமிழர் தவிர பிற மதத்தினருக்கு பொருந்தும்.
- இலங்கை, பங்களாதேஷ் நாடுகளிலிருந்து வந்துள்ளனர். எவ்வளவு பேர் என குறிப்பிட்டு கூற முடியாது.
- தெரியும்.
- படித்துதான் கூற முடியும்.
- அரசியல் அமைப்பு சட்டத்தில், 1முதல் 12 வரை, குடியுரிமை சட்டம் விளக்குகிறது. எனவே சோனியாவிற்கு திருமண உறவு முறையில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
விவரம் இல்லை:
பத்மநாபன், திருப்பூர், தெற்கு மாவட்ட செயலாளர்
”எத்தனை முறை திருத்தப்பட்டது என தெரியல. அந்தளவுக்கு இன்னும் படிக்கலே,” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் போது, அவருக்கு பின் இருந்த ஒரு நிர்வாகி, ”சிக்ஸ்எம்சி அமன்ட்மென்ட் ஏக்ட்” என்றார்.
அதை அப்படியே தவறாக ஒப்பித்தார். ‘சிஏஏ.,’ தொடர்பான கேள்விகளுக்கு, ‘கையில் விவரம் இல்லை, வீட்டுல இருக்கு. அது வந்து… சொல்லியிருக்காங்க; மீட்டிங்கில் பேசும் போது கேட்டு இருக்கோம். அந்தளவுக்கு ஆழமாக, இன்னும் படிக்கல. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்தானே. நீங்க படிக்காம இருப்பீங்களா? நெட்டில் பார்த்துட்டு சொல்றோம். ஹலோ…. நீங்க கேள்விய எழுதி வாட்ஸ் அப்பில் அனுப்புங்க, பதில் சொல்றோம்,’ என்றார்.
அனைத்து மதத்தினருக்கும்:
டாக்டர் வரதராஜ், தி.மு.க., பொள்ளாச்சி நகர பொறுப்பாளர்
- Citizenship amendment act (குடியுரிமை திருத்தச் சட்டம்)
- இரண்டு முறை
- இந்த திட்டம், மேற்கத்திய நாட்டில் பொருந்தினாலும் நமது இந்திய துணை கண்டத்துக்கு இது பொருந்தாது.
- அனைத்து மதத்தினருக்கு பொருந்தும்.
- தெரியாது
- சரியாக தெரியலை.
- தெரியும்; அதனை பற்றி முழுமையாக தெரியாது.
- தெரியாது.
கரெக்ட்டா தெரியல:
அசோகன், தி.மு.க., பொங்கலுார், ஒன்றிய செயலாளர்
சட்டத்தை படிச்சு பார்க்கணும், கரெக்ட்டா தெரியல. நீங்க ரிப்போர்ட்டர்தானே… உங்களுக்கு தெரியாதா? எத்தனை முறை திருத்துனாங்கங்கன்னு பார்க்கோணும். என்ன, நீங்க இப்படி கேக்குறீங்க. ஆங்கில விரிவாக்கம் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்குறது இல்ல. தலைமை சொல்லியிருக்கு, கையெழுத்து வாங்கிட்டு இருக்கோம். தலைமை சொல்லறத செஞ்சுட்டு இருக்கோம். நான், ஆங்கிலம் விரிவாக்கம் என்னவென்று பார்த்துட்டு, ‘பைவ் மினிட்சில்’ சொல்றேன் சார்.
‘சொல்ல மாட்டேன்!’
எம்.எல்.ஏ., கார்த்திக், தி.மு.க., கோவை மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்
தினமலர் நாளிதழ், எங்கள் நிலையை எதிர்த்து தான் எழுதிக் கொண்டிருக்கிறது. நீங்கள் எப்படி நியாயமாக இருப்பீர்கள் என்று எதிர்பார்ப்பது? நடுநிலையாக வெளியிடுவதில்லை. நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
பொருந்தும்னு சொல்லுறாங்க
செல்வராஜ், தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர்
- Citizenship Amendment Act (இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம்)
- தெரியாது; இதற்கு முன்பு திருத்தப்பட்டுள்ளது என சொல்லியிருக்காங்க.
- இந்தியாவுக்கு மட்டும். இல்லை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு பொருந்தும்.
- பொதுவாக முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களுக்கு மட்டும் பொருந்தும் சொல்லுறாங்க.
- சரியாதெரியல.
- கேள்விபட்டு இருக்கேன்.
- அதுபற்றி தெரியாது.
- தெரியும்.
ஆட்டத்துக்கு நாங்க வரலை!
தி.மு.க., முன்னாள் கவுன்சிலரும், கிழக்கு மண்டல முன்னாள் தலைவருமான சாமி, 10 நிமிடம் கழித்து மீண்டும் போனில் அழைப்பதாக கூறினார். முன்னாள் கவுன்சிலர் மீனா லோகநாதன், உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாகவும், அரை மணி நேரம் கழித்து போனில் பேசுவதாகவும் கூறினார். இருவருமே, மீண்டும் பேசவில்லை. இவர்களைப் போன்றே மேலும் பல நிர்வாகிகளும் கருத்துகூற தயங்கி, ‘எனக்கு வயிற்றுப் போக்கு – வாந்தி பேதி’, ‘உடம்புக்கு சரியில்லை’, ‘ஊரில் இருக்கிறேன்’ என்ற காரணங்களைக் கூறி கழன்று கொண்டனர்.
நன்றி : தினமலர்