”எனக்கு மிரட்டல் வந்தது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிப்பேன் என கூறி இருந்தேன். மத்திய அரசு நிச்சயம் பாதுகாப்பு அளிக்கும்,” என, மதுரை ஆதீனம் கூறினார்.
தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசத்திற்கான தடை நீக்கப்பட்டதை வரவேற்று, மதுரையில் பக்தர்களுக்கு மதுரை ஆதீனம் இனிப்பு வழங்கினார். அவர் கூறியதாவது:
பட்டினப்பிரவேச தடை நீக்கப்பட்டதை வரவேற்கிறேன். இதை முன்பே சமய தலைவர்களுடன் சுமுகமாக பேசி தீர்த்திருக்க வேண்டும். மற்ற ஆதீனங்கள் அரசுடன் ஒத்துப்போகும் போது, நான் மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்.பல்லக்கு துாக்குவது என்பது ஏழாம் நுாற்றாண்டில் இருந்தே நடந்து வருகிறது.
இதனால் தடை செய்யக் கூடாது என, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தேன். அதை ஏற்று அனுமதி தந்ததற்கு வாழ்த்துக்கள். இவ்விஷயத்தில் குரல் கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். குறிப்பாக, திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு வாழ்த்துக்கள். அவர் இவ்விஷயத்தை ஆரம்பிக்காமல் விட்டிருந்தால், பட்டினப்பிரவேசம் என்றால் என்ன என யாருக்கும் தெரிந்திருக்காது. இன்று உலகத்திற்கே தெரிந்து விட்டது.
கஞ்சனுார் கோவில் இடங்களை ஆளுங்கட்சியினர் ஆக்கிரமித்ததுடன் மிரட்டுகின்றனர் என்று கூறி இருந்தேன். தவறு செய்யும் தி.மு.க., வினரை கட்சியில் இருந்து நீக்குவேன் என, முதல்வர் கூறி இருந்தார்.
நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். பள்ளத்துாரில் ஆதீன நிலத்தில் வீடு கட்டுவோம் என, தி.மு.க.,வைச் சேர்ந்த ஊர் தலைவர் மிரட்டுகிறார். அவர் 6 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார். இப்படி இருந்தால் எப்படி நிர்வாகம் செய்ய முடியும். கஞ்சனுார் கோவில் பெண் நிர்வாக அதிகாரி, அன்னதானம் உண்டியலையே துாக்கிச் சென்று விட்டார். அறநிலையத்துறைக்கும், அரசுக்கும் கடிதம் எழுதினேன். இதுவரை நடவடிக்கை இல்லை. அன்னதானம் நடக்காமலேயே அன்னதானம் நடந்ததாக அவர் கணக்கு எழுதியுள்ளார்.
நான், பா.ஜ., ஹிந்து அமைப்புகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கவலைப்பட போவதில்லை. எல்லா சமய சம்பிரதாயங்களையும் முதல்வர் பாதுகாக்க வேண்டும்.அவர் எல்லாருக்கும் முதல்வர். அறநிலையத்துறை கோவில்களில் கட்டணமில்லா தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். தி.மு.க.,வின் ஓராண்டு ஆட்சி குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை.எனக்கு மிரட்டல் வந்தது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிப்பேன் என கூறி இருந்தேன்.மத்திய அரசு நிச்சயம் பாதுகாப்பு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பேரூர் ஆதீனம் வாழ்த்து
பேரூர் ஆதீனம் நேற்று கூறியதாவது:
மரபையும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் மதித்து தடை உத்தரவை நீக்கிய அரசுக்கு எங்களது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வருங்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காக, வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில், தீர்வு காணப்படும்.
இதற்காக, தெய்வீக பேரவை என்ற அமைப்பையும் புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ் வழிபாட்டு பயிற்சிக்கு எல்லா வகையிலும், அனைத்து ஆதீனங்களும் துணை நிற்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















