தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற கோயில்களின் சார்பில் கல்லூரிகள் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன.. உதாரணமாக அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 1970களில் இருந்து நடத்தப்படுகிறது. இதேபோல் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி, நாகப்பட்டினம் மாவட்டம் மேலையூரில் பூம்புகார் கல்லூரி என பல்வேறு கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. பொதுவாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பது வழக்கம்.
இந்த சூழலில் சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிதியை கொண்டு, கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது.
அந்த கல்லூரிக்கு பணியாளர்களை தேர்வு செய்ய நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுத்து கடந்த 2021-ம் ஆண்டு அறிவிப்பாணை அறிவித்தது. அதில், இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே கல்லூரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், சுகைல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ”ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ”கோவில் வாயிலாக இயங்கும் கல்லுாரி, மத நிறுவனம் அல்ல; அது கல்வி நிறுவனம். கல்லுாரியில் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு, அறநிலையத்துறை நடைமுறை பொருந்தாது என வாதிட்டார்.
“இந்து அறநிலையத்துறை சார்பில் சட்டப்படி, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிதியில் இருந்து கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளதால், அந்த கல்லூரி மத நிறுவனம்தான். இந்த கல்லூரியை நடத்த அரசிடம் இருந்து எந்தவித நிதியும் பெறவில்லை. இது சுயநிதி கல்லூரி என்பதால் பணி நியமனங்களில் இந்து மதத்தை சார்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும்” என வாதிப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி விவேக்குமார் சிங் பிறப்பித்த உத்தரவு: ஆவணங்களை பரிசீலிக்கும் போது, கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியானது, ஒரு சுயநிதி கல்லுாரி என்பதும், அரசிடம் இருந்து எந்த உதவியும் பெறாமல், மாணவர்களிடம் பெறப்படும் கட்டணம் வாயிலாக செலவுகள் மேற்கொள்ளப்பட்டு, கோவிலால் நடத்தப்படுவது என்பதும் தெரிகிறது.
இந்தக் கல்லுாரியை துவக்கியது கோவில் என்பதாலும், மத நிறுவனம் என்ற வரையறைக்குள் வருவதாலும், அறநிலையத்துறை சட்டம் இதற்கு பொருந்தும். எனவே, ஹிந்துக்கள் மட்டுமே பணி நியமனம் பெற தகுதி உள்ளது.அறநிலையத்துறை சட்டப்படி, இந்தக் கல்லுாரியில் எந்த நியமனம் நடந்தாலும், அவர் ஹிந்து மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். இந்த வழக்கில் தகுதியில்லை; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















