தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும் என்ற மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது வியப்பை தரவில்லை. மாறாக ஆளும் திமுகவின் ஊழலுக்கு துணை போகும் நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது.
பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ராஜாராம் மற்றும் கோவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ராதாகிருஷ்ணன், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி உட்பட பல துணை வேந்தர்கள் லஞ்ச , ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறையிலோ அல்லது பிணையிலோ உள்ளனர் என்பதை சிந்தித்து பார்க்க மறுக்கிறார் தமிழக முதலமைச்சர். இந்தியாவிலேயே ஊழல் குற்றத்திற்காக பல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் சிறையிலோ அல்லது பிணையிலோ இருப்பது தமிழகத்தில் மட்டும் தான் என்பது வெட்கக்கேடானது.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பல்கலைக்கழகங்கள் கல்வி கொள்ளையர்களின் கூடாரங்களாக செயல்பட்டு வந்ததை முதலமைச்சர் ஸ்டாலினால் மறுக்க முடியுமா? துணைவேந்தர் பதவிக்கு பல கோடிகள், துணை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனங்களில் பல லட்சக்கணக்கில் லஞ்சம், மாணவர்களின் அனுமதிகளில், தேர்வில், தேர்ச்சியில் முறைகேடுகள், கல்லூரிகளுக்கு நாற்காலிகள் வாங்குவதில் கூட லஞ்சம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக ஊழல்கள் பெருமளவில் நடைபெற்று வந்த நிலையில், வேந்தரே ஒரு திறன் வாய்ந்த வல்லுநர் குழுவை அமைத்து அரசியல் சார்பில்லாமல், தகுதியான ஒரு துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் முறையை தொடர்வது தானே மாநில நலனுக்கும், மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்கும்?
எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்ற எண்ணத்தோடு, துணைவேந்தர் பதவி என்பது பணம் காய்க்கும் மரம் என்ற கொள்கையோடு, தகுதியற்ற, திறமையற்ற, முறைகேடான நிர்வாகத்தை அளித்த ஊழல் நபர்களை துணைவேந்தர்களாக நியமித்ததன் மூலம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியவர்கள், மீண்டும் தமிழக மாணவர்களை சீர்கேட்டை நோக்கி இட்டுச் செல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த நியமனங்களில் விளையாடிய அரசியல் வியாபாரம், தமிழகத்தை மட்டுமல்ல, கல்வி துறையையே சீர்குலைய வைத்தது. மாணவர்களுக்கு, பெற்றோருக்கு நம்பிக்கையை விளைவிக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள் நம்பிக்கையின்மையையும், மோசடியையும் வெளிச்சம் போட்டு காட்டியது. இந்நிலையில் துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழுவின் தலைவராக திறமை வாய்ந்த வேற்று மாநிலத்தவரை நியமித்து, உண்மையிலேயே தகுதி வாய்ந்த ஒருவரை துணைவேந்தராக்கும் ஆளுநரின் செயல்பாடு வரவேற்கத்தக்கது.
ஊழல் எனும் சாக்கடையில் ஊறி திளைத்துக்கொண்டிருந்த பல்கலைக்கழகங்கள், சில வருடங்களாக, வேந்தரான தமிழக ஆளுநரின் வழிகாட்டுதலில் புனிதம் பெற்றது. இதிலும் மாநில உரிமைகள், மொழி என்னும் குறுகிய உள்நோக்க அரசியலை புகுத்தி ஊழலை தொடர்வதற்கான குரலை எழுப்பும் அரசியல்வாதிகள் வருங்கால தலைமுறைக்கு மிக பெரும் துரோகத்தை செய்பவர்களாகவே கருதப்படுவார்கள்.
நாராயணன் திருப்பதி, பாஜக செய்தித்தொடர்பாளர்