அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது கடந்தாண்டு ஜூன் 13-ல் கைது செய்தது.பலமுறை ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் மீண்டும் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது.செந்தில் பாலாஜியின் தரப்பு வாதத்துக்கு பதிலளித்து, அமலாக்கத்துறை தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டார். அவர் வாதடிய போது அனல் பறந்தது. செந்தில் பாலாஜியின் மீது அடுக்கடுக்கான புகார்களையும் ஆதாரங்களையும் வைத்து வாதாடினார். அப்போது அவர், “போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பதவிக்கு ஏற்றவாறு, 2 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை என மொத்தம், 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு மூன்று வழக்குகள் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளன. அந்த ஆதாரங்கள், உயர் நீதிமன்ற உத்தரவின்படி மட்டுமே அமலாக்கத்துறை பெற்றது. அந்த ஆதாரங்கள் எதுவும் திருத்தப்படவில்லை” என விளக்கினார். மேலும், “முந்தைய ஜாமீன் மனு தள்ளுபடிக்கு பிறகு, இந்த வழக்கில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதுவும் ஜாமீன் மனு விசாரணை துவங்குவதற்கு ஒரு நாள் முன் தான் ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் இன்னமும் அவர் செல்வாக்கான நபராகவே உள்ளார். ஏற்கனவே பணம் கொடுத்தவர்களிடம் செந்தில் பாலாஜி சமரசம் செய்திருக்கிறார். வழக்கில் சாட்சிகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்க கூடும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சண்முகம், சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்று கூடுதல் அமலாக்க துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.
வழக்கில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை. அவை 2020-ல் பெறப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை எந்த ஆதாரத்தையும் உருவாக்கவும் இல்லை; திருத்தவும் இல்லை. மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ஆவணங்களை மட்டுமே நம்பியுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
மேலும் “30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர், ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. சாட்சி விசாரணை தொடங்க அமலாக்கத்துறை தயாராக உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதத்தை நிறைவு செய்தார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கு விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதனிடையே, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, அவரை நாளை நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
அப்போது, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி மெமோ தாக்கல் செய்வதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மெமோவை பெற்றுக்கொள்வதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த நீதிபதி, பின்னர் மெமோவை தற்போது பெற்றுக்கொள்வதாகவும் அதன் மீது பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதி எஸ்.அல்லி கூறினார். அதேநேரம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இருபதாவது முறையாக நாளை ஒரு நாள் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.