’Indian’s First and Indian’s last’ என்ற ஒற்றை முழக்கத்தால் ஒருங்கிணைவோம்!
1994 முதல் 2001 வரையிலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்கொய்தாக்களின் ஆட்சி அல்ல-அல்ல, அவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்தது. 2001 ஜனவரியில் ஆப்பிரிக்காவின் அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல், அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள்; அதே ஆண்டு செப்டம்பர் 11-ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மற்றும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தலைமையிடமான பெண்டகன் மீதான பயங்கரவாத விமானத் தாக்குதலுக்கு பின்லேடனே காரணம் என அமெரிக்கா கருதியதால், பின்லேடனை கைது செய்ய தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக விளங்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் மற்றும் அல்கொய்தா அமைப்புகள் மீது 2001-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமெரிக்கா தாக்குதலைத் தொடுத்தது. கடந்த 20-ஆண்டுகாலம் அமெரிக்கா மற்றும் அதன் நேசப் படைகள் ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ளன.
இந்தியாவின் மீது பல ஆண்டுகளாக நடைபெறும் அனைத்துவித பயங்கரவாத தாக்குதல்களும் பாகிஸ்தானிலிருந்து செயல்படக்கூடிய தீவிரவாத அமைப்புகளுக்கும், தலிபான் போன்ற அமைப்புகளுக்கும் இடையே இருக்கக்கூடிய பிணைப்பே காரணம் என்று இந்தியா குற்றச்சாட்டுகளை வைத்த போதெல்லாம் உலகின் பல நாடுகள் செவி சாய்க்கவில்லை. உலகத்தில் தீவிரவாத தாக்குதல்களுக்கு தினமும் ஆளாகக்கூடிய நாடுகளில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது. 1971 பாகிஸ்தானுடனான போருக்குப் பிறகு, இந்தியா பெரிய யுத்தங்கள் எதையும் சந்திக்கவில்லை. எனினும் பாகிஸ்தானிலிருந்து எல்லை கடந்து வந்த முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளின் தாக்குதலை மட்டும் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். 1999ஆம் ஆண்டு கார்கில் போர், 2019 ஆம் ஆண்டு பதன்கோட் மற்றும் புல்வாமா பகுதிகளில் எல்லை தாண்டி இந்திய ராணுவத்தின் மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் நாம் மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகளைச் சந்தித்தோம்.
கடந்த ஆண்டு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் ஏரி ஆகிய பகுதிகளில் சீன-இந்திய இருநாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 20-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 3000 கி.மீட்டர் இந்திய-சீன எல்லைப் பகுதியில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் இரு நாட்டு தலைவர்களுடனான பேச்சு வார்த்தைக்கு பிறகு, போர் பதட்டம் குறைந்து முன்பு இருந்த நிலைக்கு திரும்பப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுரா, அச்சாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த காலங்களில் வெகுவாக இருந்து வந்த ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் தற்போது அவ்வளவாக இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுக் காலம் உலகத்தையும், இந்தியாவையும் முடக்கிப் போட்ட கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னும் நாம் முழுமையாக மீளவில்லை. எனினும் நாளுக்கு நாள் இந்திய எல்லையைச் சுற்றி பல்வேறு வகைகளில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உருவாகி வருவது கவலையளிக்கிறது.
இந்தியாவின் தென்முனையிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையின் வடகிழக்கு பகுதியில் ‘அம்பாந்தோட்டை’ என்ற இடத்தில் ஒரு துறைமுகத்தை முழுமையாகப் புனரமைத்து அதில் சீனா மையம் கொண்டுள்ளது. வங்கதேசம், பர்மா போன்ற அண்டை நாடுகள் இந்தியாவின் பகை நாடுகளாக இல்லை என்றாலும், முக்கியமான கால கட்டங்களில் இந்தியாவுக்குத் துணை நிற்பார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. வரையறை செய்யப்பட்ட எல்லைகள், இலட்சியங்கள், கொள்கைகள், கோட்பாடுகளோடு கட்டியமைக்கப்பட்ட தேசங்கள் என்றால் போர்க்காலங்களில் எப்பேற்பட்ட அசாதாரண சூழலிலும் கூட சில சர்வதேச நெறிமுறைகளை கடைப்பிடிப்பர்கள். ஆனால், நமது தேசத்தின் மேற்கு எல்லையில் நாம் சந்திக்கும் எதிரிகள் எவ்வித நியாயம், நெறிமுறைகளுக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல; அவர்கள் எந்தவிதமான நிரந்தர முகவரி உடையவர்களும் அல்ல. அவர்கள் தங்களின் முகாம்களையும், முகவரிகளையும் அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள். எல்லை தாண்டி மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்கள் வரை இந்திய மண்ணுக்குள் ஊடுருவி தீவிரவாத தாக்குதல் தொடுப்பதற்குண்டான எல்லா பலங்களும், நிதி ஆதாரங்களும் வேறு வேறு தேசங்களிலிருந்து கிடைத்ததால் மட்டுமே அது சாத்தியம் ஆயிற்று.
1986-2001 காலகட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன், அல்கொய்தா மற்றும் தலிபான்களின் கை ஓங்கியிருந்த போது, இந்தியா தினமும் எண்ணற்ற எல்லை கடந்த தாக்குதல்களை சந்தித்து வந்தது. 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நேபாள நாட்டுத் தலைநகர் காட்மண்டில் இருந்து 178 பயணிகளுடன் டெல்லிக்குப் பயணித்த ’ஏர் இந்தியா’ விமானம் நடு வானில் கடத்தப்பட்டு, எரிபொருள் நிரப்ப முதலில் அமிர்தசரசில் தரையிறக்கப்பட்டது. அதன்பின் விமானம் லாகூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின் ஆப்கானிஸ்தானிலுள்ள முக்கிய நகரான இந்திய வரலாற்றோடு பின்னிப் பிணைந்த ’கந்தகார்’ நகரில் தரை இறக்கப்பட்டது. இந்தியா அல்லது மொசோத் கமோண்டக்களின் அதிரடி நடவடிக்கைகளால் விமானப் பயணிகள் விடுதலை செய்யப்பட்டு விடக்கூடாது என்பதால் கடத்தப்பட்ட விமானத்திற்கு பாதுகாப்பு அளித்தவர்கள் தலிபான் படையைச் சேர்ந்தவர்கள். மூன்று நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியச் சிறைகளிலிருந்த மூன்று தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டு தலிபான்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகே, 178 இந்தியப் பயணிகளையும் மீட்டு வர முடிந்தது.
உலகின் வேறு எந்த நாடும் இந்தியாவுக்கு எதிராக அது போன்ற கடத்தல் நடவடிக்கைகளுக்கு இடமளித்திருக்காது. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருந்த காரணத்தினால் தான், பாகிஸ்தானியக் கடத்தல்காரர்கள் இந்திய விமானத்தை கந்தகாருக்கு எளிதாக கடத்திச் செல்ல முடிந்தது.
மதவாத கோசத்தால் இந்தியத் தேசத்தைத் துண்டாடிய பிறகும், அவர்களும் நிம்மதியாக இல்லாமல், இந்தியாவின் 140 கோடி மக்களையும் நிம்மதியாக இருக்க விடாமல் தினமும் தீவிரவாத தாக்குதல் தொடுத்து கொண்டே இருக்கிறார்கள். உலகில் இன்றும் தீவிரவாதிகளின் உற்பத்தி களமாக பாகிஸ்தான் உள்ளது. எவ்வளவோ நாடுகள் கண்டித்த பிறகும், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அளிப்பதாகத் தெரியவில்லை.
2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டுப் படைகளின் (NATO) தாக்குதலுக்குப் பிறகு, தலிபான்கள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று எதிர்பார்த்த வேளையில், 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைதூக்கி பல முக்கிய நகரங்கள் அவர்கள் கைவசம் வந்து விட்டன என்ற செய்திகள் வேறு யாருக்கும் கவலை அளிக்கிறதோ? இல்லையோ? இந்தியாவுக்குக் கவலை அளிக்கக் கூடியதாகும். உலக வரலாற்றில் ஏகாதிபத்தியங்களை எப்போதும் முழுமையாக நம்பக் கூடாது என்பதற்கு தலிபான்களின் விஷயத்தில் அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவு ஒரு மிக முக்கியமான தவறான முன்னுதாரணமாகும்.
அமெரிக்கா மற்றும் நேச நாடுகளின் படைகள் எல்லாம் அங்கு முகாமிட்டு இருக்கும் போதே, 2020 பிப்ரவரியில் கத்தார் எனும் வளைகுடா நாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலிபான்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அல்கொய்தா மற்றும் தலிபான்களை உலக பயங்கரவாத அமைப்புகளாக உலக அரங்கில் அறிவித்துவிட்டு அவர்களுடன் அமெரிக்கா மட்டும் இரகசிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? நோக்கம் என்ன? என்பதை பொறுப்பு வாய்ந்த அமெரிக்கா உலக நாடுகளுக்கு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் தெரிவிக்கவில்லை.
2000 ஆம் ஆண்டுகளில் பெருமளவு இளம் வயதை உள்ளடக்கிய தலிபான்கள் கடந்த இருபது வருடத்தில் போராடும் திறனைப் பெருமளவில் இழந்திருப்பார்கள்; வயது முதிர்ச்சியும் அடைந்திருப்பார்கள்; பன்னாட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டு இருந்ததால் பெரிய அளவிற்கு தாலிபான்களின் விரிவாக்கங்களுக்கும் வாய்ப்பு இருந்திருக்காது. எனவே, பலம் இழந்து நிற்கும் தலிபான் மற்றும் அல்கொய்தாக்களை மீண்டும் அழைத்துப் பேசி அவர்களை அங்கீகரிக்கவும், அடையாளப்படுத்தவும் வேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு ஏன் வந்தது? ஒருபக்கம் ஆப்கானிஸ்தானின் மக்களுக்குக் குடியரசை நிறுவ வேண்டும் என்ற பெயரில் தேர்தல்களை நடத்தி, அதன் மூலம் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, ஆட்சியில் அமர்த்தியது மட்டுமில்லாமல், ஆப்கானிஸ்தானிய நாட்டின் கட்டமைப்புகளான சாலைகள், அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள், நூலகங்கள் ஆகியவற்றை உலகின் பல நாடுகள் ஒன்றிணைந்து புனரமைத்தும், புதுப்பித்தும் கொடுத்து உள்ளார்கள். இன்னொரு பக்கம் ஜனநாயகத்திற்கு முற்றிலும் மாறுபட்ட சிந்தனையுடன் கூடிய அடிப்படை மதவாத சிந்தனை கொண்ட தலிபான்களுடன் அமெரிக்கா இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி தலிபான்களை ஊக்குவித்து வந்திருப்பது அமெரிக்காவின் இரட்டை நிலைபாட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
கர்த்தார் நகரில் தலிபான்களுடனான டொனால்ட் ட்ரம்ப் நடத்திய இரகசிய பேச்சுவார்த்தை மற்றும் ஆகஸ்ட் 31-க்குள் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் பைடன் அவர்களின் அறிவிப்பு வந்தவுடனேயே பாகிஸ்தானில் பயிற்சி பெற்று இரகசியமாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த 10000க்கும் மேற்பட்ட ஜிகாத்திகளும், பல்லாயிரக்கணக்கான தலிபான்களும் ஆயுதங்களுடன் சுதந்திரமாக வெளியே வந்து ஆப்கானிஸ்தானின் பெரும் கிராமப் பகுதிகளையும், கந்தகார் போன்ற நகர் பகுதிகளையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகத் தகவல்கள் வருகின்றன.
தலிபான்கள் ஆப்கானிஸ்தான்-ஈரான் எல்லையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது மட்டுமின்றி, ஈரானில் தஞ்சம் புகுந்திருந்த ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானிய மக்களைக் கட்டாயப்படுத்தி அவர்களை ஆப்கானிஸ்தானுக்குள் வரவழைத்து உள்ளனர். அதே போல, பாகிஸ்தான் எல்லையின் மிக முக்கியமான சாலைகளையும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாகத் தெரிகிறது. நிலைமை மோசமாவதை அறிந்தே கந்தகார் நகரிலிருந்த இந்தியத் தூதரக அதிகாரிகள் அவசர அவசரமாக இந்தியாவிற்குத் தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
திட்டமிட்டபடி ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் பட்சத்தில் இன்று அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளால் உருவாக்கி வைக்கப்பட்டுள்ள அரசு சீர்குலைந்து (Collapse) ஆப்கான் முழுமையாக தலிபான் மற்றும் அல்கொய்தா வசம் சென்று விடுவதற்கான ஒரு மோசமான சூழல் உருவாகியுள்ளது. அப்படி ஒரு அசாதாரண சூழல் ஏற்படுமேயானால் அதை சுற்றி இருக்கக்கூடிய நாடுகளான இந்தியா, கஜகஸ்தான், இரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் அதை எப்படி எதிர்கொள்ளும் என்பது குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் கடந்த இரண்டு வாரக் காலமாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத் ஆலோசித்து வருகிறார்.
இருபது ஆண்டுகால அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த பின்னரும் தலிபான்கள் அதே உத்வேகத்துடன் மீண்டும் எழுந்து வருவது எப்படி சாத்தியமாகும்? என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. அமெரிக்கா நினைத்திருந்தால் ஆப்கானிஸ்தானின் ஓவ்வொரு அடியையும் சல்லடை போட்டுத் துடைத்திருக்க முடியும்; தீவிரவாதிகளை நிராயுதபாணிகளாக்கி இருக்க முடியும். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு பிறகும், ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் அதே உத்வேகத்துடன் தலைதூக்க முடிகிறது என்று சொன்னால் இதில் அமெரிக்காவின் உள் குத்தல் இருக்கிறதோ? என்ற கேள்வி எழாமல் இல்லை.
அமெரிக்க உடன் தலிபான்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக வேண்டுமானால் அமெரிக்கர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஏற்கனவே எல்லை கடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு தினமும் ஆளாகிவரும் இந்தியா போன்ற நாடுகளால் தலிபான்களின் வளர்ச்சியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
தலிபான்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு மனோரீதியான ஆலோசனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு, அவர்கள் ஜனநாயக பாதைக்குத் திருப்பி விடப்பட்டவர்கள் அல்ல. 2001 ஆம் ஆண்டு எந்த ஆக்ரோஷத்துடன் அவர்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரம் செய்தார்களோ, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற வெளியேற அதே ஆக்ரோஷத்துடனேயே அந்த இடங்களை எல்லாம் ஆயுதபாணிகளான தலிபான்கள் கைப்பற்றுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இன்னும் முழுமையான ஆட்சி-அதிகாரம் தலிபான்கள் கைக்கு வரவில்லை. எனினும் அவர்கள் கைப்பற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நடக்கும் சம்பவங்களே எவ்வளவு மோசமான ஆட்சி-அதிகாரத்தை அந்நாடு மக்கள் சந்திக்கப் போகிறார்கள் என்பதற்குச் சாட்சி.
தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பெண் குழந்தைகள் பள்ளிக்கூடமே செல்லக் கூடாது; உறவினர்கள் துணை இல்லாமல் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது; பெண்கள் வெளியே வரும் போதெல்லாம் கருப்பு துணிகளால் உடல் முழுவதும் மூடி இருக்க வேண்டும்; அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் டிவி, ரேடியோ, இண்டர்நெட், நாட்டியம், இசை என எதுவும் இருக்கக்கூடாது; ஆண்கள் எவரும் சவரம் செய்யக்கூடாது, ஆண்கள் தாடிதான் வளர்க்க வேண்டும்; ஆப்கானிஸ்திய பாரம்பரிய உடைகளைத் தான் அணிய வேண்டும். சிறு திருட்டுக்கும் மாறுகால், மாறுகை போன்ற கொடும் தண்டனைகள் திறந்த வெளிகளில் நிறைவேற்றப்படுகின்றன.
பசியோடும் பட்டினியோடும் கிடக்கும் ஆப்கானிஸ்திய மக்களுக்கு ஐ.நாவால் அனுப்பி வைக்கப்பட்ட 15 லட்சம் பேருக்கான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கவிடாமல் அனைத்தையும் நாசமாக்கியது மட்டுமின்றி, அந்த உணவைக் கொண்டு வந்த 15 பேரை மதமாற்றம் செய்ய வந்தவர்கள் என குற்றம் சுமத்தி, பல மாதம் சிறையில் அடைத்து பின் உலக நாடுகளின் கண்டனத்திற்குப் பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். சில தினங்களுக்கு முன்பு, தலிபான்களின் கட்டளையை ஏற்றுச் சரணடைய வந்த 25 ஆப்கான் ராணுவ வீரர்கள் தங்களது ஆயுதங்களை எல்லாம் கீழே போட்டுவிட்டு மண்டியிட்டு சரணாகதி அடைந்த பின்னரும், அவர்கள் அனைவரும் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றைய முன் தினம் தலிபான் – ஆப்கான் போரை படம் பிடிக்கச் சென்ற ’டேனிஸ் சித்திக்’ என்ற இந்தியப் புகைப்படக்காரர் தலிபான்களால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் 370 சரத்து இரத்து செய்யப்பட்ட போது காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாகப் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் காஷ்மீரை பார்வையிட வந்தார்கள். சீனாவின் ’உய்க்கூர்’ பகுதியில் மனித உரிமை மீறல் நடப்பதாகக் குற்றம் சுமத்துகிறார்கள். பாகிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது என்று வெளிப்படுத்தியதற்காக ’மலாலா’ என்ற பள்ளி மாணவி சுடப்பட்டார். அவருக்கு மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு கொடுத்து மகிழ்ந்த மேற்கத்திய உலகம் இப்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடக்கும் அப்பழுக்கற்ற மனித உரிமை மீறல்களை நேரில் சென்று காணவோ, கண்டிக்கவோ ஏன் மறுக்கிறது? என்பதே கேள்வி.
ஜனநாயகத்தின் எந்த மாண்பையும் ஏற்றுக்கொள்ளாமல் அடிப்படை மதவாத ஆட்சி-அதிகாரத்தை மட்டுமே நிறுவ விரும்பக்கூடிய தலிபான்களுடன் எந்த அரசு எவ்விதமான பேச்சுவார்த்தை நடத்தி, என்னவிதமான முடிவுக்கு வர முடியும்? உலக பயங்கரவாத அமைப்புகளாக தலிபான்களையும், அல்கொய்தாக்களையும் அடையாளப்படுத்தி அறிவித்துவிட்டு ஆப்கானிஸ்தானிலிருந்து திடீரென்று அனைத்துப் படைகளையும் வாபஸ் பெறுவது ஆப்கான் மக்களுக்கும், அதன் எல்லையைச் சுற்றியுள்ள பல நாடுகளுக்கும், குறிப்பாக இந்தியாவிற்கும் எவ்வளவு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்பது குறித்து அமெரிக்கா ஏன் சிந்திக்கவில்லை? தாலிபான்களை அமெரிக்கா முற்றாக ஒழித்து விடும் என்றும் நாம் கருதக்கூடாது. ஏனெனில் 1979 டிசம்பர் 24 ஆப்கானிஸ்தான் மீதான இரஷ்ய படையெடுப்புக்குப் பின்னர் முஜாஹிதீன், தலிபான்கள் மற்றும் அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு பாலூட்டி வளர்த்ததே அமெரிக்கா தான் என்ற குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் உண்டு.
இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான் ஒன்றும் அந்நிய மண் அல்ல. பாகிஸ்தான், பங்களாதேஷ் போல ஒரு காலத்தில் இந்தியாவின் அங்கமாக இருந்ததுதான். சந்திரகுப்த மௌரியர், அதன்பின் அசோகர் ஆகிய பேரரசர்கள் இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்த காலத்தில் ஆப்கானிஸ்தான், நேபாளம், பர்மா, பூட்டான் உள்ளிட்ட பகுதிகளும் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருந்திருக்கின்றன என்பதே வரலாறு. அசோகர் காலத்தில்தான் ’காந்தார தேசம்’ என்றழைக்கப்பட்ட இன்றைய ஆப்கானிஸ்தானில் உள்ள ’பாமியான்’ என்ற மலைப்பகுதியில் 120 மற்றும் 160 அடி உயரமுடைய இரண்டு புத்தர் சிலைகள் செதுக்கப்பட்டிருந்தன. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வரலாற்றுக் கலாச்சார சின்னங்களான அந்த சிலைகளை 2001 ஆம் ஆண்டு தலிபான்கள் ’டைனமைட்’ வைத்துச் சிதைத்தார்கள்.
புத்தர் சிலைகளை ஏன் உடைத்தீர்கள்? என்று தலிபான் தலைவரிடம் கேட்ட போது, ”நாங்கள் உருவ வழிப்பாட்டை எதிர்க்கிறோம்” என நியாயப்படுத்தினார்கள். அவர்களிடம் ”உலகில் சிலையை மட்டுமின்றி, சூரியனை, பூமியை, காற்றைக் கூட மக்கள் வணங்குகிறார்கள். அதையெல்லாம் தகர்த்து விடுவீர்களா?” என சிலர் கேட்டபோது, அவர்களால் பதில் கூற முடியவில்லை. முஜாஹிதீன்கள், அல்கொய்தாக்கள், தலிபான்கள் சொந்த முயற்சியில், சித்தாந்ததில் வளர்ந்தவர்கள் அல்ல, குறிப்பாக 1960-க்கு பிறகு, அமெரிக்கா-இரஷ்யா என்ற இரண்டு வல்லரசு நாடுகளுக்கு இடைய ‘Cold War’ என்ற அழைக்கப்பட்ட நிழல் யுத்தங்களில் அமெரிக்காவால் நேரடியாகவும், மறைமுகமாகவும் வளர்க்கப்பட்ட அமைப்புகளே இவர்கள்.
1975-க்கு பிறகு ஆப்கானிஸ்தானில் பொதுவுடைமை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட கம்யூனிச ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்த பொதுவுடைமை சித்தாந்த வாதிகள் எடுத்த ஜனநாயக ரீதியான நடவடிக்கைகள் மற்றும் நில சீர்திருத்தங்களை ’War Lords’ எனும் நிலச்சுவான்தார்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏழைகளுக்கு நிலம் தர மறுத்த நிலச்சுவான்தார்கள் ஆட்சியாளருக்கு எதிராக மதவாத குழுக்களைப் பயன்படுத்தி கிளர்ச்சிகளை உருவாக்கினார்கள்.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த பொதுவுடைமை சித்தாந்த ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் 1979 டிசம்பர் 24-ல் ரஷ்யா தனது படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. ஏற்கனவே அமெரிக்காவின் தயவால் பாகிஸ்தானில் பல தீவிரவாத இயக்கங்கள் இயங்கி வந்தன. அவைகள் பெரும்பாலும் இந்தியத் தேசத்திற்கு எதிராகவே களமிறக்கப்பட்டவர்கள். அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் பொதுவுடைமை-பொதுவுரிமை சித்தாந்த ஆட்சி உருவானதையும், அதற்கு ஆதரவாக ஆப்கானிஸ்தானில் இரஷ்யா களமிறங்கியதையும் அமெரிக்காவாலும், ஆப்கானிஸ்தானில் பரவும் கம்யூனிச ஆட்சியால் தங்களது நாட்டிலும் பழமைவாத ஆட்சி காலியாகிவிடும் என்ற அஞ்சிய பாகிஸ்தானிய அடிப்படை மதவாதிகளாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அளவு கடந்த மறைமுக ஆதரவு மற்றும் சுற்றியிருந்த எண்ணெய் வளமிக்க நாடுகளிலிருந்து கொட்டி குவிக்கப்பட்ட நிதி உதவிகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் அபரிவிதமான வளர்ச்சிக்கு பெருமளவில் உதவின.
சர்வதேச அழுத்தம்; உள்நாட்டில் ஏற்பட்ட ’perestroika and Glasnost’ போன்ற கருத்துக்களுக்கு ஆட்பட்ட இரஷ்யா ‘முகமது நஜிபுல்லா’ என்பவரை ஆட்சியில் அமர்த்திவிட்டு 1989-ல் ஆப்கான் தேசத்தை விட்டு வெளியேறியது. இரஷ்யப் படைகள் வெளியேறிய பிறகு அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்த அசாதாரண சூழல்களில் தான் பின்லேடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் நுழைந்ததாக சொல்லப்படுகிறது. 1990களில் தலிபான் இயக்கத்தைத் துவங்கி ஏற்கனவே செயல்பட்டு வந்த முஜாஹிதீன் அமைப்புகளோடு இணைந்து 1994-ல் ஆப்கானிஸ்தான் ஆட்சியை தலிபான்கள் பிடித்தார்கள். தாலிபான்கள் ஆட்சியமைக்க மறைமுகமாக ஏறக்குறைய 20 ஆண்டுகள் அமெரிக்கா அவர்களுக்கான அடித் தளத்தை அமைத்துக் கொடுத்தது. 1994-2001 வரையிலும் தலிபான்களின் காட்டாட்சி எப்படி நடைபெற்றது என்பதை உலகம் அறியும். அந்த காலகட்டங்களில் தான் காஷ்மீரே இந்தியாவை விட்டு போககூடிய ஒரு சூழல் உருவானது. இந்தியாவின் எல்லைக்குள் 500 கி.மீட்டர் உள்ளே வந்து தீவிரவாதிகள் முகாமிட்டதால் கார்கில் போர் தொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த காலகட்டங்களில் தான் மும்பைக் குண்டு வெடிப்புகள் நடந்தன. அமெரிக்காவின் ’B’ Team-ஆகவே தலிபான்களும், அல்கொய்தா தீவிரவாதிகளும் வளர்க்கப்பட்டார்கள்.
”வளர்த்த கிடா மார்பில் பாயும்” என்பதற்கு இணங்க அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட தலிபான்களும், அல்கொய்தாக்களும் தங்களுக்கு ஒரு நாடு கிடைத்த பின்னர் அமெரிக்காவோடு மோதி பார்க்க தயாரானார்கள். ஆப்பிரிக்காவில் அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் தொடுத்து 100க்கும் மேற்பட்டோர் பலியாக காரணமாக அமைந்தார்கள்; அதே வருடம் செப்டம்பர் 11-ல் அமெரிக்கா கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அமெரிக்கத் தொழில் வளர்ச்சியின் அடையாளமாக விளங்கிய 150 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரங்கள் அமெரிக்க விமானங்களைக் கொண்டே தகர்க்கப்பட்டன. உலகின் எந்த நாடுகளின் மீதும் எப்போதும் வேண்டுமானாலும் போர் தொடுக்கும் இராணுவ தளமாக விளங்கும் வாஷிங்டனில் உள்ள இராணுவ தலைமையிடமான பென்கடன் மீதே விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அன்று நடைபெற்ற விமானத் தாக்குதலில் மட்டும் 5000-க்கும் மேற்பட்ட அமெரிக்க மக்கள் கொல்லப்பட்டார்கள். அதுவரையிலும் ‘America Attacking’ என்று மட்டுமே கேள்விப்பட்டு வந்த அமெரிக்கர்கள் ’America Under Attack’ என்ற வார்த்தையை முதல்முறையாக வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் கேட்கும் சூழல் உருவானது. இந்த மிகப்பெரிய சம்பவத்திற்கு தலிபான்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளும், பின்லேடனும் தான் காரணம் என அமெரிக்கா அறிவித்தது.
ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை ஒப்படைக்க தலிபான்களை அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் அவர்கள் பின்லேடனை ஒப்படைக்க மறுத்துவிட்டு, அதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்றும், அவர்களே விசாரித்து தண்டனை அளிப்பதாகவும் தலிபான்கள் விளக்கம் அளித்தார்கள். பயங்கரவாதம், தீவிரவாதம், பழமைவாதத்தின் புகலிடமாக விளங்கக்கூடிய ஆட்சி-அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள தலிபான் மற்றும் அல்கொய்தா அமைப்புகளைக் கூண்டோடு அழிப்பது ஒன்றே இலக்கு என அறிவித்து அமெரிக்கா மற்றும் அதன் நேச படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன. ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் சென்ற பின்லேடன் அமெரிக்கக் கடற்படையால் கொல்லப்பட்ட பிறகு, தலிபான்களையும், அல்கொய்தாக்களையும் முற்றாக ஒழிக்க அமெரிக்கா பெரிய அளவிற்குச் சிரத்தை எடுத்துக் கொண்டாக தெரியவில்லை. பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, தங்களுடைய மிகப்பெரிய பணி முடிந்து விட்டதாகவே அமெரிக்கா கருதி, தலிபான்கள் மற்றும் அல்கொய்தாக்கள் மீதான பிடிகளை மெல்ல மெல்லத் தளர்த்திக் கொண்டது.
அதற்கு அடிப்படை காரணங்களும் இல்லாமல் இல்லை. தலிபான்களும், அல்கொய்தாக்களும் அமெரிக்காவிற்கு புதியவர்களும் அல்ல; எதிரிகளும் அல்ல. அமெரிக்காவால் மறைமுகமாக பல்லாண்டுகாலம் வளர்க்கப்பட்டவர்களே அவர்கள். எனவே, தலிபான்கள், முஜாஹிதீன், அல்கொய்தா தீவிரவாதிகளை அமெரிக்கா ஒழிக்கும் என எவரும் நம்பி விடக் கூடாது. அமெரிக்கா பாதுகாப்பாக இருந்தால் போதும் என்பதே அமெரிக்காவின் தலையாய குறிக்கோள். அதேபோன்று அமெரிக்காவுக்குள் சென்று ஒரு அடிப்படை மதவாத கட்டமைப்பை எளிதாக உருவாக்க முடியாது என்பது தலிபான்கள், முஜாஹிதீன், அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு நன்கு தெரியும்.
எனவே, தலிபான்கள் எங்கு சூழல் சாதகமாக இருக்கிறது என்று கருதுகிறார்களோ அங்கு தங்களுடைய அதிகாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பார்கள். அமெரிக்காவிற்கு ஒன்றும் உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் எல்லாம் கிடையாது. உலகம் முழுவதும் சண்டை நடக்க வேண்டும். ஆயுதத்திற்கு அமெரிக்காவிடம் கையேந்த வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான நோக்கம். எந்த நாட்டுப் படைகளும் இன்னொரு நாட்டுக்குள் நுழையக்கூடாது; அந்நாட்டுக்குள் சில குறிப்பிட்ட பணிகளுக்காகச் செல்ல நேர்ந்தால் பணிகள் முடிந்தவுடன் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த விதியை தாலிபான்களுக்கும், அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. தலிபான்களும், பாகிஸ்தானியத் தீவிரவாத அமைப்புகளும் வேறு வேறு அல்ல. தலிபான்கள் ஒருவேளை இந்தியாவோடு மோத மாட்டார்கள் என்று கற்பனை செய்து பார்த்தாலும் கூட, பாகிஸ்தானின் தீவிரவாதிகளால் தலிபான்களின் பின்புலத்தைப் பயன்படுத்தாமல் எப்படி சும்மா இருக்க முடியும்? அமெரிக்காவின் தயவால் பிறந்து, வளர்ந்து ஆளாகி அமெரிக்காவின் இரத்தத்தையே சுவைத்துப் பார்க்கத் துடித்த தாலிபான்களுக்கும், அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும் இந்தியாவிற்கு எதிராக வெறுமனே சும்மா இருப்பார்கள் என்று கனவிலும் எண்ணிப் பார்க்க இயலாது.
இரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்குள் அவ்வளவு எளிதாக அவர்கள் நுழையவும் முடியாது; களம் அமைக்கவும் முடியாது. ஆனால், பாகிஸ்தான் நமக்கு நிரந்தர பகையாளி என்ற நிலையில், ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்கள் வசம் போகின்ற பொழுது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் கூட்டு வலுவாகிவிடும். கொஞ்சக் காலம் அந்நிய ஆதரவு குறைவாக இருந்த காரணத்தினால் அவ்வப்போது குறைந்து வந்த எல்லை மீறிய தாக்குதல்கள் இனி அதிகரிப்பதற்குண்டான நிலைகள் ஏற்பட்டுவிடும்.
எனவே பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் தலிபான்களிடமிருந்து இந்தியாவிற்கு பேராபத்து உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்க உதவும், ஜப்பான் உதவும், ஆஸ்திரேலியா உதவும் என ‘QUAD’-ஐ நம்பி நாம் கேடு அடைந்து விடக் கூடாது. இந்தியாவிற்கு வரும் எந்தவித பாதிப்பையும் எதிர்கொள்ளும் திறன் இந்திய மக்களுக்கு எப்போதும் உண்டு. ஆயிரமாண்டுகால அந்நிய படையெடுப்புகளாலேயே இந்தியாவின் முகவரியை அழித்துவிட முடியவில்லை. இந்தியர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலேயேயும் புதைந்து கிடக்கும் “Indian’s First and Indian’s Last” என்ற தேசப்பற்றை தட்டியெழுப்பும் நேரம் இது. இந்தியாவோடு மோதி பார்க்க நினைத்தால் எவரும் முற்றாக அழிக்கப்படுவார்கள் என்பதை நிலை நிறுத்தக் கூடிய வகையில் இந்தியாவின் 140 கோடி மக்களும் ஒன்றுபட வேண்டும்; ஒற்றை சிந்தனையில் ஒருங்கிணைய வேண்டும்.
உலக பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட தலிபான்கள், அல்கொய்தாக்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலை தூக்கவோ, ஆட்சியில் அமரவோ அனுமதிக்கப்பட்டால் உலகிற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அமெரிக்காவிற்கு உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியில் அமரும் வகையில் அமெரிக்கா மற்றும் நேசநாட்டு படைகளை முற்றாக ஆகஸ்ட் 31க்குள் திரும்பப்பெறுவது எவ்விதத்திலும் சரியான செயல் அல்ல. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல. ஆசிய அமைதிக்கும், உலக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் செயலாகும். இதை அமைதியை விரும்பும் எந்த உலக நாடும் ஏற்றுக்கொள்ளாது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தலை தூக்குவது இந்தியாவிற்கு அடுத்துவரும் பேராபத்தாகவே இருக்கும் என்பதால் இந்திய அரசும், இந்திய மக்களும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது. இந்திய நாட்டின் பாதுகாப்பிலேயே நமது வீட்டின் பாதுகாப்பும், நமது பாதுகாப்பும் அடங்கியுள்ளது.
இந்தியராக ஒன்றுபடுவோம்!
எவ்வித தாக்குதலையும் முறியடிக்க ஆயத்தமாவோம்!!