ஆவின் நிறுவனத்தில், பாலின் அளவைக் குறைத்து வழங்கி ஒரு மிகப்பெரிய மோசடி தமிழகத்தில் அரங்கேறியது அடுத்து ஆவின் பால் விலை உயர்ந்தது அடுத்து வெண்ணை முதல் நெய் வரை அனைத்து ஆவின் பொருட்களின் விலையை ஏற்றியது என மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை வழங்கியது திமுக அரசு. மேலும் ஆவினில் பலவேறு மோசடிகள் தொடர்ந்து கொண்டே வருகிறது.
“ஈரோடு ஆவினில் நடைபெற்ற முறைகேடுகள், தணிக்கை மற்றும் ஆர்.டி.ஐ பதில்கள் மூலமாக வெளிவந்து ஆறு மாதங்களாகி விட்டன. ஆனால், முறைகேட்டுக்குக் காரணமான அதிகாரிகள்மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை” எனக் கொதிக்கிறார்கள் பால் உற்பத்தியாளர்கள்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக, ஈரோடு ஆவின் அலுவலக வளாகத்தில் தரக்கட்டுப்பாடு அதிகாரிகளின் மேற்பார்வையில் பலகாரங்கள் தயாரிக்கப்படுவது வழக்கம். ஆனால், 2021-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஆவினே பலகாரம் தயாரிக்காமல், ஆறு தனியார் பேக்கரி களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் , அந்த பேக்கரிகள் மூலமாக 24,245 கிலோ மைசூர் பாக் தயாரிக்க 2,500 கிலோ நெய் ஆவின் நிறுவனத்திலிருந்து வழங்கப்பட்டதாகச் சொல்லி சுமார் 2,000 கிலோ நெய்யை வெளிச் சந்தையில் விற்பனை செய்திருக்கிறார்கள் மேலாளர் மோகன்குமாரும், நிதி மேலாளர் சபரிராஜனும். அதன் மூலம் 10 லட்ச ரூபாய்க்கு மேல் ஆதாயமடைந்திருக்கிறார்கள். ஆவின் விதிகளின்படி, பயன்படுத்தப்பட்ட நெய் பாட்டில்களை இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால், வெளிச்சந்தையில் நெய்யை விற்றதால் அந்தப் பாட்டில்களைக் கணக்கு காட்ட முடியவில்லை. இவை அனைத்தும் தணிக்கையில் தெரியவந்திருக்கின்றன.
குறிப்பிட்ட பலகார வகைகளை பேக்கரிக்காரர்களே பேக் செய்து கொடுத்த நிலையில், ‘பேக்கிங் சார்ஜஸ்’ என 20 லட்சம் ரூபாய் கணக்கெழுதியிருக்கிறார்கள். இதேபோல, பலகார வகைகள் விற்பனை செய்ததில் கிடைத்த லாபத்திலும் ரூ.12.84 லட்சத்தைக் குறைத்து கணக்கு காட்டியிருப்பது ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்திருக்கிறது.
உச்சகட்டமாக, குறிப்பிட்ட பேக்கரிகள் மைசூர் பாக் உள்ளிட்ட பலகாரங்களை ஆவினுக்குத் தயாரித்துக் கொடுத்ததற்காக வழங்கிய பில்லில் பேக்கரியின் முழு முகவரி, ஜி.எஸ்.டி எண், உணவு தரக்கட்டுப்பாடு (FSSI) சான்றிதழ் எண், பில்லின் சீரியல் எண் என எதுவுமே இல்லை. காய்கறிக்கடை பில்போல ஒன்றைப் பெற்று, அந்த பேக்கரிகளின் பெயரில் பல லட்ச ரூபாய் செட்டில் செய்யப்பட்டிருக்கிறது.
இப்படி, 2021-ம் ஆண்டு தீபாவளிப் பலகாரத்தில் மட்டும் மேலாளர் மோகன்குமார், நிதி மேலாளர் சபரிராஜன் இருவரும் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்திருக்கின்றனர். அதிகாரிகளின் கையாடல் தொடர்பாகஆர்.டி.ஐ மற்றும் ஆவின் தணிக்கை ஆதாரங்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தொடங்கி, ஆவின் தலைமை அதிகாரிகள் வரை புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பிரச்னையை உயரதிகாரிகள் மூடிமறைக்க முயல்வதால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்” என்றார் கொதிப்புடன்.
இது தொடர்பாக மேலாளர்கள் மோகன்குமார், சபரிராஜன் இருவரிடமும் விளக்கம் கேட்டோம். “இந்தப் புகார்கள் தொடர்பாக துறைரீதியிலான விசாரணை நடைபெற்றுவருகிறது. எனவே, தற்போது எங்களால் இது குறித்து எந்த பதிலும் கூற முடியாது” என்று முடித்துக்கொண்டனர்.
ஆவின் நிர்வாக இயக்குநர் வினித்திடம் பேசினோம். “ ‘2021-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது பலகாரங்கள் செய்வதற்கான ஒப்பந்தம் முறையாக விடப்படவில்லை’ என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. தணிக்கையின்போது, மைசூர் பாக் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட நெய் பாட்டில்கள் இல்லாதது தெரியவந்தது. அதனடிப்படையில் நெய் கடத்தப் பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. யூகத்தின் அடிப்படையில் நெய் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் புகார் இருக்கிறது. அது குறித்து மறுவிசாரணைக்கு உத்தரவிடப் பட்டிருக்கிறது. மற்றபடி, விசாரணை அறிக்கையின் முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.