புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிடம், 64 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பில் ரூ.971 கோடி செலவில் நில அதிர்வு ஏற்பட்டாலும், அதனை தாங்கும் வகையில் அதிநவீன வசதியுடன் அமைகிறது. இந்திய கலாசாரத்தின் பன்முக தன்மையை பிரதிபலிக்கும் இதன் கட்டுமானப்பணியில் 2 ஆயிரம் பேர் நேரடியாகவும், 9 ஆயிரம் பேர் மறைமுகம் ஆகவும் ஈடுபடுவார்கள்.
தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் அமருகிற வகையில் இருக்கை வசதிகள் உள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடம், எதிர்காலத்தில் இரு அவைகளையும் விரிவாக்கம் செய்ய வசதியாக மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரத்தக்க வகையில் கட்டப்படுகிறது.
புதிய கட்டிடத்தில், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும். தரைத்தளம், அதன்கீழே ஒரு அடித்தளம், முதல் தளம், இரண்டாவது தளம் என மொத்தம் 4 தளங்களை கொண்டிருக்கும். நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்திய ஜனநாயகத்தின் பெருமையை உலகுக்கு எடுத்து காட்டுகிற வகையில் பெரிய அரங்கம் ஒன்று அரசியல் சாசன அரங்கம் என்ற பெயரில் அமையும். நூலகம், கட்சி அலுவலகங்கள், பல்வேறு நிலைக்குழு அலுவலகங்கள், உணவு உண்ணும் அரங்குகள், வாகன நிறுத்துமிடங்கள் என அளவில்லா வசதிகளை கொண்டிருக்கும்.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று காலை 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்தில் உருவான தேசிய சின்னம் ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ள பணியாளர்களுடன் சிறிது நேரம் பிரதமர் மோடி உரையாடினார்.