கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிராஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள யாத்கிர் சைபர் கிரைம் போலீஸ் நிலைய எஸ்.ஐ., பரசுராம், 34, கடந்த 2ம் தேதி இரவு திடீரென உயிரிழந்தார்.
அவரது மனைவி, போலீசில் புகார் அளித்தார்:-சைபர் கிரைமில் இருந்து, டவுன் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்ய, யாத்கிர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துன்னுார், அவரது மகன் பாம்பண்ண கவுடா ஆகியோர், பரசுராமிடம் 30 லட்சம் ரூபாய் கேட்டு நெருக்கடி கொடுத்ததுடன், ஜாதியை சொல்லி திட்டியதாகவும் பரசுராமின் மனைவி, போலீசில் புகார் அளித்தார்.
இதன்படி சன்னரெட்டி பாட்டீல், பாம்பண்ண கவுடா மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது.
பரசுராம் தற்கொலை செய்ததாக உறவினர்கள் கூறியதால், வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு மாற்றி உள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலையில் இருந்து காங்., – எம்.எல்.ஏ.,வும், அவரது மகனும் தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில், நேற்று மதியம் பரசுராம் வீட்டிற்கு, பா.ஜ.,வை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் சென்று பரசுராம் பெற்றோர், அவரது மனைவி ஸ்வேதாவுக்கு ஆறுதல் கூறினார்.
பின், அவர் அளித்த பேட்டி:தலித் குடும்பத்தைச் சேர்ந்த பரசுராமுக்கு நியாயம் கிடைக்க போராடுவோம். யாத்கிர் தொகுதி யில் தலித் சமூகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி இருக்க கூடாது என்று, எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் கூறியதாக, பரசுராமின் பெற்றோர் என்னிடம் தெரிவித்தனர்.
அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனப்படி பதவி ஏற்ற எம்.எல்.ஏ., ஒருவர், தலித் பற்றி இப்படி பேசியது கேவலமான செயல். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தலித் அதிகாரிகள் இறக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.