முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை கடந்த வாரம் நடைபெற்றது. அதன் முடிவில், தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. விண்வெளி தொழில்நுட்பத்தில் முதலீடு, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய 3 முக்கிய இலக்குகளை கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கவும் அரசு இலக்குகளை நிர்ணயித்துள்ளது. விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான ஸ்டார்ட்-அப்களை எல்லாம் ஊக்குவிக்கும் வகையில், இந்த கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சலுகைகளை அள்ளி வீசும் அரசு:
விண்வெளி தொழில் கொள்கை மூலம், patents வாங்குவதற்கு 50 சதவிகிதம் சலுகையை அரசாங்கமே வழங்கும். 300 கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகளுக்கு சிறப்பு சலுகை தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில், ஸ்பேஸ் பே என்று ஒரு சில இடங்கள் அறிவிக்கப்பட்டு, அந்த இடத்தில் முதலீடுகள் வருமேயானால், அதற்கு ஸ்பெஷல் package கொடுப்பதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஊதிய மானியமாக முதலாம் ஆண்டு 30 சதவிகிதம், இரண்டாம் ஆண்டு 20 சதவிகிதம், அதற்கடுத்து, மூன்றாம் ஆண்டு 10 சதவிகிதம் என்ற ஊதிய அளவில் கூட ஊக்கத்தை, விண்வெளி தொழில் கொள்கை மூலம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
யாருக்காக விண்வெளி தொழில் கொள்கை?
யாருமே எதிர்பாராத விதமாக, திடீரென சர்வதேச நாடுகளுடன் போட்டியிடும் நோக்கில் என்ற தலைப்பில் விண்வெளி தொழில் கொள்கையை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதோடு, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளும் அள்ளி வீசப்பட்டுள்ளன. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது, “தமிழ்நாட்டில் இங்கே சென்னையில் ஒரு நிறுவனம் மிகச் சிறப்பான பணிகள் எல்லாம் செய்து வருகிறது” என அமைச்சர் டிஆர்பி ராஜா குறிப்பிட்டு இருந்தார். அந்த நிறுவனம் எதுவாக இருக்கும் என தேடியபோது தான், முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் ஆலோசகராக இடம்பெற்றுள்ள ”வானம்” எனும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் கவனத்திற்கு வந்துள்ளது.
சபரீசனுக்காக அரசின் புதிய கொள்கை?
”வானம்” என்பது நாட்டின் முதல் தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமாகும். சபரீசனின் சகோதரர் ஹரிஹரன் மற்றும் சமீர் பாரத் நிறுவனர்களாக இருக்க, ஆலோசகராகவும், முதலீட்டாளராகவும் இந்நிறுவனத்தில் சபரீசன் முக்கிய பங்களிக்கிறார். முன்னாள் இஸ்ரோ ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் ஆலோசகராக இந்நிறுவனத்தில் முக்கிய பங்காற்றுகிறார். ”விண்வெளி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்துவது, விண்வெளி தொடர்பான வணிக அறிவை பெறுவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தான், பல்வேறு சலுகைகளுடன் விண்வெளி தொழில் கொள்கைக்காக தமிழ்நாடு அரசு தற்போது ஒப்புதல் கொடுத்துள்ளது.
சபரீசன் தொடர்பான சர்ச்சைகள்:
தமிழ்நாடு கள அரசியலில் தீவிரமாக செயல்படாவிட்டாலும், முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தின் பின்புலத்தில் சபரீசன் முக்கிய பங்கு வகிக்கிறார் என நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு நிலவுகிறது. அரசின் பல முக்கிய முடிவுகளில், சபரீசனின் பங்களிப்பு நிலவுவதாகவும் அதிமுக போன்ற கட்சிகள் சாடி வருகின்றன. இந்நிலையில் தான், சபரீசன் முக்கிய பங்கு வகிக்கும் வானம் நிறுவனம் தொடங்கப்பட்ட 6 மாதங்களிலேயே, தமிழ்நாடு அரசு விண்வெளி தொழில் கொள்கையை அறிவித்துள்ளது. ஏற்கனவே திமுக என்றாலே குடும்ப கட்சி என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் புதிய கொள்கையானது முதலமைச்சரின் மாப்பிள்ளைக்காகவே உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















