சீனாவில் துவங்கிய, கொரோனா வைரஸ், உலகெங்கும் பெரும் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கொரோனவால் சீனா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார் அவர் பேசியதாவது : கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, சீனா ரகசியம் காத்துள்ளது. அதன் தீவிரம் குறித்து தெரியப்படுத்தாமல் இருந்தது. அதனால், மிகக் கொடூரமான நரக வேதனையை அந்த நாடு சந்தித்தது. அது, தற்போது உலகெங்கும் ஆட்டிபடைத்து வருகிறது. துவக்கத்திலேயே, சரியான தகவலை, சீனா தெரிவித்திருந்தால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், எச்சரிக்கையுடன், தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.
சீனாவுடன நல்ல உறவில் உள்ளோம். சீன அதிபர், ஸீ ஜின்பிங், சிறந்த நண்பர். வைரஸ் பாதிப்பு, சீனாவில் தீவிரமடைந்தபோது, ஜின்பிங்குடன் பேசினேன். அனைத்து உதவிகளும் செய்யத் தயாராக இருப்பதாக கூறினேன். அங்குள்ள பிரச்னை குறித்து அவர், சொல்லி இருக்கலாம். இந்த வைரஸ் பாதிப்பு வெளிப்படையாக தெரிய வந்த பிறகே, அமெரிக்காவுக்கும் தெரியவந்தது. முன்பே தகவல் தெரிந்திருந்தால், அதற்கான தீர்வை கண்டுபிடித்திருக்கலாம். வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதால், அமெரிக்க மக்கள், வீடுகளிலேயே முடங்கியிருந்து, உயிர் பலி அதிகரிப்பதை தடுக்க வேண்டும். இந்த வைரஸ் பாதிப்பை தடுப்பதில், நாம் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம். மிக விரைவில், வெற்றியைக் கொண்டாடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
அமெரிக்காவில், 26 ஆயிரத்து, 686 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதிக வைரஸ் தொற்று உள்ள நாடுகளில், சீனா மற்றும் இத்தாலிக்கு அடுத்த இடத்தில், அமெரிக்கா உள்ளது. அங்கு, 340 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நாடுகளில், அமெரிக்கா, ஆறாவது இடத்தில் உள்ளது.டாக்டருடன் வாதம்சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘மலேரியாவுக்கு வழங்கப்படும், ‘ஹைட்ராக்சிகுளோராகுயின்’ என்ற மருந்தை, கொரோனா பாதிப்புக்கு வழங்கலாம்’ என, அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நாட்டின் புகழ்பெற்ற தொற்றுநோய் சிகிச்சை நிபுணர், டாக்டர் அந்தோணி பாசி, பங்கேற்றார். ‘சோதனைகளில் இது உறுதி செய்யப்படவில்லை. அதனால், மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்தை, கொரோனாவுக்கு வழங்க முடியாது’ என, பாசி கூறினார்.’இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால், இந்த மருந்து கொடுக்கலாம் என நான் கருதுகிறேன். அது மிகவும் சிறந்த மருந்து. இருந்தாலும், டாக்டர் சொல்வதை ஏற்கிறேன் என, டிரம்ப் உடனடியாக பதிலளித்தார்.
Courtesy : Dinamalar