பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவை தொகுதிகளில் ஊழலுக்கு எதிரான ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில், என் மண் என் மக்கள் பயணமானது நடைப்பெற்றது. கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
மழையும் பொருட்படுத்தாமல் அண்ணாமலை அவர்களுக்கு மக்கள் பெரும் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். மேட்டூர் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அவர்கள்.
புகழ்பெற்ற மேட்டூர் அணை மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல எதிர்ப்புகளைக் கடந்து, 1934ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணைதான் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் கொடுக்கிறது.
தமிழகம் பசுமையாகவும் செழுமையாகவும் இருக்க முக்கிய காரணம் மேட்டூர் அணை. கடந்த 2022 ஆம் ஆண்டு, மேட்டூர் அணையில் தண்ணீர் தேக்கி வைக்க போதிய கொள்ளளவு இல்லாமல் சுமார் 500 TMC தண்ணீர், (சுமார் 14 லட்ச கோடி லிட்டர்) கடலில் வீணாக கலந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழக அரசின் நீர்வளத்துறை தமிழக அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில், மேட்டூர் அணையை தூர்வாரினால், கூடுதலாக 30 டிஎம்சி தண்ணீர் அணையில் தேக்கி வைக்க முடியும் என்றும், அதற்கு 3,000 கோடி ரூபாய் செலவாகும் என்றும் கூறியிருந்தனர்.
கடலில் கலக்கும் நீரை, மேட்டூர் அணையில் சேமித்து வைத்தால், விவசாயிகளுக்குப் பலன் கிடைக்கும் என்பதற்காகத் தான் இந்த தூர்வாரும் திட்டம். ஆனால் அரசிடம் நிதி இல்லை என்று கூறி இந்த திட்டத்தை நிராகாரித்துவிட்டது திமுக அரசு.
கடலில் பேனா சிலை வைக்க, சென்னையில் கார் பந்தயம் நடத்த, மத்திய அரசின் திட்டத்திற்கு புதிதாக தமிழ் பெயர் வைத்து, அதற்கு ஒரு விழா எடுத்து வீண் விளம்பரம் செய்ய, குடும்பத்துடன் துபாய் இன்பச் சுற்றுலா செல்ல, முதலமைச்சரின் தந்தை கலைஞர் கருணாநிதி பெயர் வைப்பதற்காகவே கட்டாயமாக ஒரு கட்டிடம் எழுப்ப என வீண் செலவுகள் அனைத்துக்கும் திமுக அரசிடம் பணம் இருக்கிறது.
மேட்டூர் அணையை தூர் வார அரசிடம் பணம் இல்லை. இந்த லட்சணத்தில் தன்னை டெல்டா காரன் என்று கூறிகொள்கிறார் முதல்வர்.
மேட்டூரில் தோனி மடுவு திட்டத்தின் கீழ் ஒரே ஒரு தடுப்பணை கட்டினால், மேட்டூர் தொகுதி உட்பட்ட கொளத்தூர் மற்றும் அந்தியூர் பகுதிகளில் மேலும் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் பல ஆண்டுகளாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
மேட்டூரில் பாலிடெக்னிக் கல்லூரி, மேட்டூர் அணையில் தற்காலிகமாகவும், பகுதி நேரமாகவும் தொகுப்பூதியத்திலும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களின் பணி நிரந்தரம், மேச்சேரியில் குளிர்பதனக் கிடங்கு, மேச்சேரியில் தக்காளி பழத் தொழிற்சாலை, தருமபுரி நகராட்சி பேருந்து நிலையம் தற்போது உள்ள இடத்திலேயே விரிவுபடுத்தப்பட்டு நவீனமயமாக்கல் என திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
ஆனால், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார் முதலமைச்சர். மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உள்ளடக்கிய மேச்சேரி வழியாக தொப்பூர் -மேட்டூர் -பவானி -ஈரோடு வரை 94 கிலோமீட்டர் நிலத்திற்கான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு, நமது மத்திய அரசு 118 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
63,828 பேருக்கு பிரதமரின் வீடு, 4,49,970 வீடுகளில் குழாயில் குடிநீர், 3,01,532 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,78,408 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 1,20,539 பேருக்கு, 1,90,151 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், சேலம் மாவட்டத்திற்கு 6682 கோடி ரூபாய் முத்ரா கடன் என மத்திய அரசு நலத்திட்டங்கள் லட்சக்கணக்கான பொதுமக்களைச் சென்றடைந்துள்ளது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும், மோடி என்ற அற்புதமான தலைவர் போட்டியிடுகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு, மக்கள் நலனை முன்னிறுத்தி, நல்லாட்சியின் இலக்கணமாக விளங்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.