தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைச்சாற்றும் இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதன் அடிப்படையில்,அதிமுக ஆட்சியில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு திட்டம் கடந்த 2009ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
இதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரை கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்தன. அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு என்ன பரிசு தொகுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “2025ம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும்,இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயனடைவார்கள். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களாகவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிற பொங்கல் தொகுப்புகளுடன் ரொக்கமாக பணமும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வருடமும் ரூ.1,000 அல்லது ரூ.2,000 என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். தங்கள் எதிர்பார்ப்புகளையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர்.
சமீபத்தில் மழையால் தமிழகத்தின் பல மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்தன.
அப்போதும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளதால் நிவாரணம் வழங்கவில்லை என்று ஆறுதல் அடைந்தனர். இந்நிலையில் ரொக்கமாக பரிசு தொகுப்பில் பணம் ஏதும் அறிவிக்கப்படாதது தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.