ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையிலும், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையிலும் தொடர்ந்து பேசிவரும் ஆ.ராசாவை தி.மு.க. அரசு கண்டுகொள்ளவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. ஆனால், ஆ.ராசா பேசியதை கண்டித்த பா.ஜ.க. மாவட்டத் தலைவரை கைது செய்வதா? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராகவும் நீலகிரி தொகுதி எம்.பி.யாகவும் இருப்பவர் ஆ.ராசா. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது ஹிந்துக்கள் குறித்து இழிவாகவும், மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆகவே, ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி, பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியதோடு, தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். மேலும், ஆ.ராசாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்கக் கோரியும், இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாத அளவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு புகார் மனுவும் அனுப்பினர். தவிர, ஆ.ராசாவின் நீலகிரி தொகுதியில் நேற்று முழு கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கோவையில் இந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, “இந்த தேதியில் வருகிறேன் என்று சொல்லி, போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் கால் எடுத்து வை பார்க்கலாம். கோவை மாவட்டத்திற்குள் நீ எங்கே கால் எடுத்து வைக்கிறாய் என்று பார்க்கிறேன். இது பகிரங்க சவால். இதற்கு தி.மு.க.வினர் தயாரா? ஆ.ராசாவை எங்கே கூப்பிட்டு வருகிறீர்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். சனாதன தர்மத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு எவனாவது வந்தால் செருப்பால் அடிப்பேன். யார் நீங்க எல்லாம்? உங்களுக்கு என்ன தெரியும் ஹிந்து சனாதன தர்மத்தை பற்றி? இதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பின் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.
இதையடுத்து, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், அவர் பேசிய வீடியோ ஆதாரத்துடன் நேற்றிரவு பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, பாலாஜி உத்தம ராமசாமி மீது பீளமேடு காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை இன்று அதிகாலையில் பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்ட தகவலறிந்து, பா.ஜ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பீளமேடு காவல் நிலையத்தில் குவிந்தனர். மேலும், போலீஸாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த சூழலில், இச்சம்பவத்தை கண்டித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், “தொடர்ச்சியாக ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிவரும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை இந்த திறனற்ற தி.மு.க. அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிவரும் ஆ.ராசாவை கைது செய்யாமல், தி.மு.க.வின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரின் இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த, பா.ஜ.க. மாவட்டத் தலைவரைக் கைது செய்தது ஏன்? தி.மு.க. அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம். உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.