மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான “அக்னிபத்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கி விட்டது. ஆட்சேர்ப்புக்கானஅறிவிப்பும் வெளியிட்டது இந்திய இராணுவம்.
இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அக்னிபத் திட்டம் குறித்து பேசுகையில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து பொதுச்சொத்தை சேதப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தேசதுரோகிகள் தான்” என அதிரடியாக கூறினார்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேரரசு பேசியதாவது: “இந்தியா என்பது பொதுவானது. இதில் இன்று ஒரு கட்சி ஆளும், நாளை மற்றொரு கட்சி ஆளும், கட்சியை விமர்சனம் செய்யலாம், கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது.
அக்னிபத் திட்டம் மதம் சார்ந்த திட்டமோ அல்லது கட்சி சார்ந்த திட்டமோ கிடையாது. இது இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த திட்டம். எந்த திட்டம் வந்தாலும் எதிர்க்கும் தீயசக்தி கும்பலை மோடி களை எடுக்க வேண்டும். இளைஞர்கள் ரயிலை கொளுத்தும் அளவுக்கு அவர்களுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது. அவர்களைப் பின்னால் இருந்து இயக்கும் நபர்களை கண்டறிய வேண்டும். இதுபோன்ற இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் பொதுச்சொத்தை சேதப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தேசத் துரோகிகள் தான். அக்னிபத் திட்டம் இதுபோன்றவர்களை அடையாளம் காட்டிவிட்டது. வன்முறையை தூண்டி விட்டு இந்துத்துவாவை வளர்க்கிறார்கள் என்ற அயோக்கிய தனமான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். அக்னிபத் திட்டம் இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என வேறுபாடு கிடையாது, விருப்பம் இருக்கும் இந்தியர்கள் யாராக இருந்தாலும் அதில் சேர்ந்து கொள்ளலாம் என்று தான் மத்திய அரசு கூறிவருகிறது.
அதேபோல் இந்தி படிக்க விரும்புபவர்கள் படிக்கலாம் என்றுதான் மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இந்தியை திணிப்பதாக கூறி மொழியை வைத்து மத்திய அரசை விமர்சிக்கின்றனர். அக்னிபத் திட்டத்தில் சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் முறையான பயிற்சி கொடுத்து அவர்களுக்கு தேவையானவற்றை மத்திய அரசு செய்துகொடுக்கிறது. இளைஞர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்கிறது. இதற்கு மேல் வேறு என்ன செய்ய வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் இந்தியாவை நாசமாக்கும் திட்டங்கள் என கூறுகிறார்கள்.
இங்குள்ள டாஸ்மாக் கடையால்தான் இளைஞர்கள் நாசமாய் போய் கொண்டிருக்கிறார்கள். அதனை முதலில் இழுத்து மூடுங்கள். இந்தியாவுக்கு நல்லது நடந்து விடக்கூடாது என ஒரு கும்பல் இது போன்ற வேலைகளை செய்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் தேசப் பற்று உள்ளவர்கள் இருக்கிறதே அபூர்வம், அப்படி தேசப்பற்றுடன் இருப்பவர்களையும் கெடுக்கும் நபர்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றனர். அவர்களை பிரதமர் மோடி இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.