சிந்து நதியில் தண்ணீரை நிறுத்தினால், ரத்த ஆறு ஓடும் என பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ கூறியதற்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பதிலடி கொடுத்தார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நேற்று ஆந்திர மாநிலம், மங்களகிரியில் உள்ள ஓர் அரங்கில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதி தண்ணீர் விநியோகத்தை மத்திய அரசு நிறுத்தி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ, சிந்து நதி பாகிஸ்தானுக்கு உரியது. அதில் தண்ணீர் பாய வேண்டும். இல்லையெனில் இந்தியர்களின் ரத்தம் பாயும் என கூறியிருந்தார்.
மேலும், “பாகிஸ்தானின் சிந்து மாகாணம் வாயிலாக சிந்து நதி பாய்கிறது. இதனால் மொகஞ்சதாரோ நாகரிகம் செழிப்படைந்தது. இதை அடிப்படையாக வைத்து இந்திய நாகரிகம் பழமையானது என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், அந்த நாகரிகம் மொகஞ்சதாரோ சார்ந்தது. அதற்கு நாங்கள்தான் உரிமையாளர்கள்” என பிலாவல் பூட்டோ பேசியிருந்தார்.அவரது இந்தக் கருத்து இந்தியாவில் கடும் கண்டனங்களுக்கு வித்திட்டது. இந்த நிலையில், இதுதொடர்பாக ஆந்திர துணை முதலமைச்சரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணிடம் ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்ததாவது:
கடந்த 3 போர்களிலும் பாகிஸ்தான் எப்படி தோற்றது என அவர்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும். போரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எப்படி சின்னாபின்னமாக்கப்பட்டனர் என்ற வீடியோவை நாம் அவர்களுக்கு அனுப்பிவைப்போம்.உயிர்த் தியாகம் செய்ய தயார்தேவை ஏற்பட்டால், ஒவ்வொரு இந்தியனும் பாகிஸ்தான் வந்து, தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம். கடந்த காலங்களை பாகிஸ்தான் மறக்கக் கூடாது என ஆவேசத்துடன் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறினார்.தொடர்ந்து காங்கிரஸை கண்டித்த அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
மேலும் துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசியதாவது: மதம் குறித்து எதுவும் பேசாத சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்றாலும், அந்த தீவிரவாதிகளுக்கும், அவர்களை ஊக்குவித்த பாகிஸ்தான் நாட்டுக்கும் இங்கு ஆதரவாக பேசுவது மிகவும் தவறு. ஆயினும் நாங்கள் அப்படித்தான் பேசுவோம் என்று கூறுபவர்கள் அந்த நாட்டுக்கே சென்றுவிடுங்கள்.தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒரே மாதிரி நடந்து கொள்வது அவசியம். காஷ்மீர் நமது நாட்டின் ஓர் அங்கம். ஆனால், ஓட்டுக்காக அரசியல் நாடகம் ஆடக்கூடாது. பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த மதுசூதன் ராவின் குடும்பத்தாருக்கு ஜனசேனா கட்சி சார்பில் ரூ.50 லட்சம் நிதி உதவி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஜனசேனா கட்சி ஒரு சிறந்த நிர்வாகியை இழந்துள்ளது.
இறந்துபோன மதுசூதன்ராவ் யாருக்கு தீங்கிழைத்தார்? காஷ்மீரும் நமது நாட்டின் ஒரு பகுதி என்பதால் மதுசூதன் ராவின் மனைவி அங்கு சுற்றுலா செல்லலாமென வலியுறுத்தியதால் மதுசூதன் ராவின் குடும்பம் காஷ்மீர் சென்றது. அங்கு அவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்துக்களுக்கு என இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான். இங்கு கூட இந்துக்கள் வெளியில் செல்லக்கூடாது என்றால் எப்படி?
வன்முறையை ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் சென்று குடியேறலாம் என்றும், இந்தியாவில் அவர்கள் இருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் பவன் கல்யாண் விமர்சித்தார். மேலும், “காஷ்மீர் நமக்கானது. அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாதத்தை முன்னிறுத்தி பேசுவது வெட்கக்கேடானது. மதவாத சக்திகளை அடக்க தேச ஒற்றுமையும் இன்றியமையாதது” என அவர் கூறினார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















