திருப்பூரில் குண்டு வெடிப்பு உயர் மட்ட விசாரணை தேவை – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை
திருப்பூர் பாண்டியன் நகரில் மளிகை கடை மற்றும் வீடு ஒன்றில் வெடிகுண்டு தயாரித்து வந்ததாக தெரிகிறது. மர்மமான முறையில் இன்று (8.10 .24- செவ்வாய் ) மதியம் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் சுற்றி இருந்த பல வீடுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழில் நகரமான திருப்பூரில் மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய பகுதியில் ஆபத்தான வெடி மருந்துகள் மிக அதிக அளவில் எப்படி எடுத்து வரப்பட்டது என்பது உட்பட பல சந்தேகங்களை இச்சம்பவம் எழுப்பி இருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் வெடிக்காத நிலையில் பெரிய உருண்டை வடிவிலான குண்டுகள் இருப்பதை காணமுடிந்தது. இதுக்கு மேலாக அங்கு வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பெரிய அளவில் வெடி மருந்துகள் வெளியே எடுத்து வரப்படுவதும்,
கொண்டு செல்லப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இது எப்படி காவல்துறைக்கு தெரியாமல் போனது, உளவுத்துறை ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்துள்ளது என்பதை இந்தச் சம்பவம் தோலுரித்துக் காட்டுகிறது. தமிழக அரசு சித்தாந்த எதிரிகளை பழி வாங்குவதில் மட்டுமே முழு கவனத்தை செலுத்தி வருகின்றது. இது போன்ற சட்டவிரோத, வெடிமருந்து பதுக்கல்களையும் வெடிகுண்டு தயாரிப்பு சம்பவங்களையும் உள்நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் அரசு கவனத்தில் கொள்வதில்லை.
உளவுத்துறை மற்றும் காவல் துறையை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே திமுக அரசு பயன்படுத்துகிறது. மக்கள் நலன், மக்கள் உயிர் போன்றவற்றை துச்சமாக மதித்து தமிழக அரசு செயல்படுகிறது.
காவல்துறையையும் உளவுத்துறையையும் புதுப்பித்து சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணை குழு அமைக்க வேண்டுமென தமிழக அரசை இந்து முன்னணி வலியுறுத்துகிறது. மேலும் இந்த வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு தலா 50 லட்சமும், காயமுற்றவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் நிவாரண நிதி அறிவிக்க வேண்டும். வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு மொத்த செலவையும் அரசே ஏற்றுக்கொண்டு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.